இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 15 மாதங்களுக்குப் பின்னர், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
33 இஸ்ரேலியப் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதும், 1,890 பலஸ்தீனியக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
"விடுதலை செய்யப்படவுள்ள கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பத்தில், பயணக் கைதிகள் சிலரை இஸ்ரேல் மீட்டுக் கொண்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதமெடுத்தார். இதற்காகத் தொடர்ந்து காஸா மீது இஸ்ரேலை அவர் போரிட வைத்தார்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தன. அதன்படி, காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
இதனால், பணயக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. எனினும், இவர்களுள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!
காஸாவில் போர்நிறுத்தம் அமுலாகியுள்ளதாக கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, காஸா மக்களும், மனிதநேயம் விரும்பும் உலக மக்களும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களின் விளைவாக தமது சொந்த இடங்களை இழந்து, ஒன்றரை வருடங்களாக பதுங்கு குழிகளிலும், கொட்டகைகளிலும் உணவு, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வந்த பலஸ்தீனியர்கள், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் சாதாரண வாழ்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
பலரும் தமது சொந்த பந்தங்களை இழந்துவிட்ட நிலையில், சாரி சாரியாக சொந்த இடங்களைத் தேடிச் சென்று கொண்டிருப்பதை இணையத்தில் பார்க்க முடிகின்றது.
முதல் நாளில் இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மூவரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். பதிலுக்கு இஸ்ரேல் 90 பேரை விடுதலை செய்யும்; ஒப்பந்தப்படி விடுதலை செய்யப்படவுள்ளவர்களின் பெயர்களை முன்னரே தெரிவிக்க வேண்டும் என்பதால், இஸ்ரேல் 90 பணயக்கைதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் மூன்று பேரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டது; அதன்படி ரோமி கொனின், ஏமி டமாரி மற்றும் டோரன் ஸ்டான்பிரசர் ஆகியோர்களை ஹமாஸ் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.
ஈரானிய ஊடக அறிக்கைகளில், இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் வெற்றியாக முன்வைக்கப்பட்டு செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன.
அதே சமயம், "அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறாதிருந்தால், ஒருவேளை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டிருக்காது" என்றும் அரபு நாடுகளின் ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.
ஜனவரி 15ம் திகதி ஈரானியத் தொலைக்காட்சி வெளியிட்ட தலைப்புச் செய்தியில், "போர் நிறுத்தத்தை இஸ்ரேலின் 'மிகப்பெரிய தோல்வி'" என்றும், "இஸ்ரேல் தனது அனைத்து வளங்களையும் போரில் முதலீடு செய்தும், ஹமாஸை அழிக்க முடியவில்லை" என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
மறுநாள் வெளியான ஈரானிய வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பாலத்தீனம், லெபனான், எமன், ஈராக், துருக்கி மற்றும் ஏனைய பிராந்திய நாடுகளில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தன.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் 'செல்வாக்கு' இல்லாமல் ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்காது என்று அரபுப் பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் காஸா போர் நிறுத்தம் குறித்து சில விமர்சகர்கள் வாதிட்டுள்ள நிலையில், "பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் மிரட்டியதாகவும் செய்தி ஒன்றும் வெளிவந்தது. இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் காரணமாக ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், ட்ரம்பின் அதிபர் பதவி இஸ்ரேலுக்கு சவாலாக அமையப் போகின்றது என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 'இஸ்ரேலின் உத்திக்கு கிடைத்த தோல்வி ' மற்றும் 'அக்டோபர் 7ம் திகதிக்குப் பிந்தைய காலத்தின் ஆரம்பம்' என்றும், 'இதில் இஸ்ரேல் பலவீனமாகவும் பயனற்றதாகவும் உள்ளது' என்றும் அரசியல் ஆய்வாளர்கள் இருவரை மேற்கோள் காட்டி, அரசு நாளிதழான ' ஈரான் தெரிவித்துள்ளது.
"ஹமாஸ் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது" என்று பழமைவாத நாளிதழான ஃபர்ஹிக்தேகன் கூறியுள்ளது.
2023ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை "அதிர்ச்சியூட்டும் வெற்றி" என்று 'குத்ஸ்' செய்தித்தாள் விவரித்துள்ள நிலையில், நெதன்யாகுவையும் இஸ்ரேலிய அமைச்சரவையையும் "தோற்கடிக்கப்பட்ட கொலையாளிகள்" என்று 'வதன்-இ-இம்ரோஸ்' குறிப்பிட்டுள்ளது.
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் "இஸ்ரேலின் உத்திகளுக்கு ஒரு பெரிய தோல்வி" என்று சில அறபுலக செய்தித்தாள்கள் கருத்து வெளியிட்டுள்ள நிலையில்,'மஷ்ரெக்' எனும் இணையதளம், இந்த ஒப்பந்தத்தை "இஸ்ரேலுக்கு அவமானகரமான தோல்வி" என்றும் விவரித்துள்ளது.
"இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் பல மாதங்களுக்கு முன்பே எட்டப்பட்டிருக்கலாம், ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாடு முக்கிய தடையாக இருந்தது" என்று முக்கிய அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜமால் ஜஹ்லாகா என்பவர், லண்டனிலிருந்து வெளிவரும் அரேபிய செய்தித்தாள் 'அல்-குத்ஸ் அல்-அரபி'யில் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் செல்வாக்கு காரணமாகவே நெதன்யாகு தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜஹல்கா மேலும் குறிப்பிடுகின்றார்.
அனுபவம் வாய்ந்த பாலஸ்தீன சிந்தனையாளரான முனீர் ஷபீக் அவர்கள், அல்-ஜஸீராவின் இணையதளத்தில் "ராணுவத் தோல்வியைத் தவிர்க்க, நெதன்யாகு தனது குறுகிய தனிப்பட்ட நலன்களை முன்வைத்தார்" என்றும் "டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் இல்லாமல், நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்" என்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை; அதனால், போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானதாக இருக்கலாம்; எந்தத் தவறான ஒரு சம்பவமும் இந்த ஒப்பந்தத்திற்கு 'பெரியதொரு அச்சுறுத்தலாக' அமையலாம் என்றவாறாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ஸ்கை நியூஸ் அரேபியா' இணையத் தளம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சர்வதேச நீதிமன்றங்களால் போர்க் குற்றங்களுக்காகத் தேடப்படும் நெதன்யாகுவின் அரசாங்கம், விரைவில் வீழ்ச்சியடைவதை எதிர்வரும் நாட்களில் பார்க்கலாம்" என்று மொராக்கோ கல்வியாளர் தாரிக் லிஸோய், லண்டனைத் தளமாகக் கொண்ட 'ராய் அல்-யூம்' என்ற இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
செம்மைத்துளியான்
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments