
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் நாளை திறக்கப்பட உள்ளது. நாளை முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாகச் சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக சர்வ தரிசன டோக்கன்கள் இன்று அதிகாலை முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக விஷ்ணு நிவாசம் உட்பட எட்டு இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. இலவச டோக்கன் பெற நேற்று மதியம் முதலே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்.
திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பைராகி பட்டிடையில் அமைக்கப்பட்ட கவுன்டரில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றனர். நெரிசலில் சிக்கியவர்கள் கதறித் துடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார். பலருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது.
அதேபோல் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சீனிவாசம் வளாகம் பகுதியில் அமைக்கப்பட்ட கவுன்டரிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. இருவேறு இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த ஐந்து பேர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா என்பவர் உயிரிழந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த ரஜினி, சாந்தி, ராஜேஸ்வரி, நாயுடு பாபு ஆகியோரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
முதல் கட்ட விசாரணையில் பிரதான நுழைவு வாயிலை திடீரென்று திறந்து விட்டதால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு உள்ளே சென்றதே விபத்துக்கு காரணம் என ஆட்சியர் வெங்கடேஸ்வர் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டை திறந்து விட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பைராகி பட்டிடையில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டரில் பணியில் இருந்தவர்கள், பிரதான நுழைவு வாயிலை திடீரென்று திறந்து விட்டதால் அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறினார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டை திறந்து விட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த கோர சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டிஜிபி மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க அறிவுறுத்தினார். இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் உத்தரவிட்டார்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments