Ticker

6/recent/ticker-posts

Ad Code



கோமியம் விவகாரம்; “அது அமிர்த நீர்” - சங்க இலக்கியத்தை மேற்கோள் காட்டிய தமிழிசை


மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ''அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தபோது ஒரு சன்னியாசி கூறியதாக கோமியத்தைக் குடித்ததால், 15 நிமிடங்களில் ஜுரம் போனதாக'' தெரிவித்தார். மேலும் பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு பிரச்சினைகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருந்து என்றும் அவர் தெரிவித்தார். அவரின் இந்தப் பேச்சு சர்ச்சையாகியது. நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனம் ஒன்றின் இயக்குநர், இதுபோன்று அறிவியல் பூர்வமாக ஆதாரமற்ற தகவல்களை கூறுவதா? என கேள்வி எழுப்பி பலரும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி, “முதலில் அவர் குடிக்கட்டும். அறிவியல் ரீதியாக ஐஐடியின் இயக்குநர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது. அறிவியல் ரீதியாக மாட்டு கோமியம் என்பது உடலுக்குக் கெடுதி என்று சொல்லப்பட்டுள்ள காலத்தில் அவர் இப்படி சொல்லியிருப்பது, எந்த அடிப்படையில், எதற்காக, ஏன் சொல்கிறார் என்றே புரியவில்லை. அவரும் ஆளுநரைப் போல் மாறிவிட்டதாகத் தெரிகிறது. மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அவர் ஒரு வகுப்பறையில் வகுப்பு எடுத்து நீங்க குடிங்க என்று சொல்லவில்லை இல்லையே. அவரின் தனிப்பட்ட கோட்பாட்டைச் சொல்கிறார். இதிலும் அரசியலாக்க நினைத்தால், அந்த மனிதர் எதற்காக இத்தனை வேலைகளைச் செய்கிறார் என்பதை மறந்து ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அரசியல் செய்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோமியம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஐஐடி இயக்குநர் காமகோடி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதற்கு என்னிடம் அறிவியல்பூர்வ ஆதாரம் உள்ளது. நானும் பஞ்சகவ்யம் அருந்துகிறேன். இந்த விவாதத்தை நேர்மறையாகப் பார்க்கிறேன். இதுகுறித்து ஐஐடி பேராசிரியர்கள் விரும்பினால், சென்னை ஐஐடியிலேயே ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

அதேசமயம், 2023-ம் ஆண்டு, இந்திய கால்நடை ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் அதிகம் பரவி வருகிறது. அதன்படி, மாடுகள், எருமைகளின் கோமியத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், அதில் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வயிறு தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் எஸ்கரிஷியா கோலை என்ற பாக்டீரியா கோமியத்தில் காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் கோமியத்தைப் பருக வேண்டாம் என்றும் அந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி இருந்தனர். பல ஆராய்ச்சிகளை நடத்தி நிரூபிக்கப்பட்ட மருந்துகளையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் கோமியம் உட்பட எதுவாக இருந்தாலும், அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லையென்றால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து இரு மாறுபட்ட கருத்துகள் சொல்லப்பட்டு வரும் நிலையில், தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆராய்ச்சி பூர்வமாக கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதனால் தான், வீட்டிற்கு முன்பு அதனைத் தெளிப்பார்கள். ஆயுர்வேதத்தில், கோமியத்தை அமிர்த நீர் என குறிப்பிடுகிறார்கள். ஆயுர்வேதத்தில் அதனை மருந்து என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்தில் மாட்டு சாணம் பூசிய முற்றங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? அப்போ மாட்டு சாணத்தில் கிருமி நாசினி இருக்கிறது என்றால் மாட்டு கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது என்று நாம் சொல்கிறோம்.

மியான்மர், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதனை எடுத்துக்கொள்கிறார்கள். எனவே இதனை ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ள முடியாது. இது ஆயுர்வேதத்தில் மருந்து என சொல்லப்பட்டுள்ளது. 80 வகையான நோய்களுக்கு கோமியத்தைப் பயன்படுத்தலாம் என ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவர் (காமகோடி) சொன்ன காய்ச்சல் அந்த 80 வகையான நோய்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்.

அறிவுபூர்வமாக, விஞ்ஞானபூர்வமாக ஒரு தொழில்நுட்ப கல்லூரியைத் தலைமை தாங்குபவர் சும்மா சொல்வாரா என்பதே என் கேள்வி” என்றார்.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments