
பாகிஸ்தானில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதின. விரைவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரில் தென்னாபிரிக்கா 2 தோல்விகளை சந்தித்து வெளியேறியது. 2 வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து மற்றும் 1 வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப்போட்டி பிப்ரவரி 14ஆம் தேதி கராச்சியில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பகார் ஜமான் 10, பாபர் அசாம் 29, சௌத் ஷகீல் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 54-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய கேப்டன் முகமது ரிஸ்வான் 45 ரன்களில் அவுட்டானார்.
அதே போல சல்மான் ஆகா 45, தாயம் தாஹிர் 38, பஹீம் அஸ்ரப் 22 ரன்கள் எடுத்தார்களே தவிர ஃபினிஷிங் செய்யவில்லை. அதனால் 49.3 ஓவரில் பாகிஸ்தானை 242 ரன்களுக்கு சுருட்டி நியூசிலாந்து அசத்தியது. அதிகபட்சமாக மைக்கல் பிரேஸ்வெல் 2, கேப்டன் சான்ட்னர் 2, வில்லியம் ஓ’ரோர்கே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்துக்கு வில் எங் 5 ரன்களில் அவுட்டானார்.
ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேன் வில்லியம்சன் 34 ரன்களும் டேவோன் கான்வே 48 ரன்களும் குவித்து அசத்தினார்கள். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய டேரில் மிட்சேல் 57 (58) ரன்கள் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து அவுட்டானார். அவருடன் விளையாடிய டாம் லதம் அரை சதத்தை அடித்து 56 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 20* ரன்கள் எடுத்தார்கள்.
அதனால் 45.2 ஓவரில் 243-5 ரன்கள் எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நாசிம் ஷா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் 2025 பாகிஸ்தான் முத்தொடர்பு ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல தயாராக இருக்கிறோம் என்பதை இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக அணிகளுக்கும் காண்பித்துள்ளது.
குறிப்பாக இதே பாகிஸ்தானை பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் நியூசிலாந்து எதிர்கொள்ள உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் தட்டுத் தடுமாறி ஃபைனலுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் அணி இங்கேயே தோற்றுள்ளது. அதனால் சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை எப்படி வென்று நடப்புச் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க போகிறோம்? என்ற பரிதாப நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments