Ticker

6/recent/ticker-posts

Ad Code



சாக்கடை அரசியலில் முளைத்த பாதாள உலகம்


சினிமா பாணியில் கனேமுல்ல சஞ்சீவ எனும் பாதாள உலகக் கும்பல் பிரதிநிதி புதுக்கடை நீதிமன்றில் நீதவானுக்கு முன்னிலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டத்தரணி வேடமிட்டு வந்திருந்த கொலையாளி ஆறு வேட்டுக்களைத் தீர்த்து, குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கிய கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்துவிட்டு பதறியோடிய பொதுமக்களுடன் கலந்து தப்பியிருந்தான். கொலையாளிக்கு உதவியாக சட்டத்தரணி வேடமிட்ட பெண்ணொருவர் செயற்பட்டிருந்தார். இச்சம்பவத்தை எதிர்கட்சியில் இருக்கும் சிலர் கொந்தளிக்கச் செய்தனர். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதாக கொக்கரித்து அரசியல் இலாபத்தை தேடமுனைந்தனர். ஆனால், கொலையாளி ஆறு மணிநேரத்திற்குள் மடக்கிப்பிடிக்கப்பட்டான். திறமைமிக்க பொலிஸார் கச்சிதமாக இந்த வேலையை செய்து முடித்திருந்தனர். எதிர்கட்சியின் குரல் மழுங்கடிக்கச் செய்யப்பட்டது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவையாவன, கொலையாளி ஒரு புனிதனோ, புத்தனோ அல்ல; அவன் ஒரு பாதாள உலகக் கும்பலின் கைக்கூலி. அதுப்போல, அவன் சட்டத்தரணி போல் வேடமிட்டு, அத்துறை சார்ந்த ஆவணங்களை தயார் செய்துகொண்டு திட்டமிட்டே வந்திருந்தான். அவன் பயன்படுத்திய அடையாள அட்டையின் QR Code கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குரியது. தவிர, கொலையாளி கைதுசெய்யப்பட்டதன் பின்னர் அவனுக்கு உடந்தையாக இருந்த பெண் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழைப்பு விடுத்து, தான் டுபாய்க்குச் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறார். இதோடு சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அதில் முக்கியமான விடயம், பொலிஸார் சாமர்த்தியமாகவும் விரைவாகவும் செயற்பட்டு கொலையாளியை கண்டுப்பிடித்தமையாகும். இவ்வாறான திறமைமிக்க பொலிஸாரால் ஏன் கடந்த கால ஆட்சிகளில் இதுபோன்ற குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் போனது? அத்தோடு, எவ்வாறு பாதாள உலகக் கும்பல்கள் தங்குதடையின்றி இலங்கையில் வளர்ந்தன? இது சர்ச்சைக்குரிய விடயமாகும். ஏனெனில், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக இயங்கிவரும் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் வரை பாதாள உலக செயற்பாடுகள் விரிவடைந்திருக்கின்றன. இவ்விடயம் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது. அதனால், பாதாள உலகக் கும்பல்கள் இலங்கையில் எவ்வாறு தோற்றம் பெற்றன, எவ்வாறு இவ்வளவு தூரத்திற்கு ஊடுருவி விரிவடைந்தன என்பனவற்றைப் பற்றி பார்க்க வேண்டியது அவசியமானது.

இலங்கைக்கு பெயரளவு சுதந்திரம் கிடைக்க முன்னர் பரவலாக காடையர்கள் தோற்றம்பெற்றுவிட்டனர். அவர்கள் அரசிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட பின்னர் கும்பலாக வளரத் தொடங்கினர். 1936 இல் இடம்பெற்ற அரசக் கழகத் தேர்தலில் முதன்முதலில் காடையர்கள் பகிரங்கமாகவே அரசியலில் பயன்டுத்தப்பட்ட விடயம் பதிவாகியிருக்கிறது. அரசியல் கட்சிகளின் தேர்தல் முறை கொண்டுவரப்படாத அக்காலப் பகுதியில் தனிநபர்கள் வெவ்வேறு நிறங்களில் போட்டியிட்டனர். அதன்போது, டி.எஸ். சேனநாயக்க தனது மகன் டட்லி சேனநாயக்கவை லண்டனில் இருந்து வலுக்கட்டாயமாக வரவழைத்து தெடிகம தொகுதியில் போட்டியிட வைத்தார். பெரிஸ்டராக பட்டம் பெற்றிருந்த டட்லி லண்டனில் தங்கிவிடவே அதுவரையில் தீர்மானித்திருந்தார். ஆனால், இலங்கை வந்த டட்லிக்கு தெடிகம தொகுதி கைநழுவிப் போகும் நிலைமையே இருந்தது. அதனால், டி.எஸ். தனது போகல கிரபைட் சுரங்க காடையர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தினார். காடையர்களை வழிநடத்தும் பொறுப்பு வில்லியம் கோபல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிர்வாணமாக சந்திகளில் சுற்றித் திரிந்த காடையர்கள் பெண்களையும் ஆண்களையும் அச்சுறுத்தி டட்லி சேனநாயக்கவை தேர்தலில் வெல்லவைத்தனர்.

அரசியல் காடையர் கும்பல்கள் 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னரே வியாபித்துப் பரவின. இவை பாதாள உலகக் கும்பல்கள் எனும் வடிவத்தையும் பெற்றிருந்தன. தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன 6இல்5 அதிகாரத்தைப் பெற்றவுடன் தனது காடையர்களை ஏவி எதிர்கட்சியினரை தாக்கிய சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. அதுப்போலவே, 1977 தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களிலும் ஜே.ஆரின் காடையர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தனக்கு எதிராகவும் தனது ஆட்சிக்கு எதிராகவும் எழும் குரல்களை ஒடுக்குவதற்கு நிறைவேற்று அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்த ஜே.ஆர். பாதாள உலகக் கும்பல்களைப் பயன்படுத்தினார். சுருங்கக்கூறின், பாதாள உலக கும்பல்களுக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசியல் லைசனை வழங்கிவைத்தார். ஜே.ஆரின் கலு லக்கி எனும் பாதாள உலக கும்பல் பிரதிநிதி பிரதம நீதியரசர் வீட்டுக்கு முன்பாக நின்று ஊச்சத்தமிட்டு, சாரனை அவிழ்த்துக் காட்டும் அளவிற்கு நிலைமை முற்றியிருந்தது. 1981 இல் காடையர்களையும் பாதாள உலகக் கும்பல்களையும் பயன்படுத்தி பெறுமதிமிக்க யாழ். நூலகத்திற்கு தீவைத்தனர். இதற்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தேர்தலில் வெல்வதற்காகவாகும். இதற்கு ரணிலும் உடந்தை என்பது ஹன்சார்ட்டிலும் பதிவாகியிருக்கிறது. 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது பெல்மடுல்ல கூட்டத்தில் ஜே.ஆர்.ஜயவர்தன உரையாற்றுகையில், “நீதிமன்றத்தையும் கேள்வி கேட்பதற்கான ஐந்து நட்சத்திர ஜனநாயகம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றார். ஆனால், 1983 இல் தமிழர்களுக்கு எதிரான ஜூலைக் கலவரம் இவை அத்தனையும் பொய் என்று நிரூபித்தது. கோணவல சுனில், கம்பஹா ஒஸ்மன் போன்ற பாதாள உலக கும்பல் பிரதிநிதிகள் ஜே.ஆர் மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்பை பேணினர். அதுப்போல, ஆர். பிரேமதாச சொத்தி உபாலி எனும் பாதாள உலக கும்பல் பிரதிநிதியைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவர்களையடுத்து, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பெத்தகான சஞ்சீவ எனும் பாதாள உலகக் குழு பிரதிநிதியை தனது மெய்பாதுகாவலனாக பயன்படுத்தியிருக்கிறார். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாமல் ராஜபக்ஸவின் மெய்பாதுகாவலனாக ஜூலம்பிட்டிய அமரே இருந்திருக்கிறார். ஜே.ஆருக்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாக மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே பாதாள உலக கும்பல்கள் வளர்ச்சிப் பெற்றன. அண்மையில் உயிரிழந்த கனேமுல்ல சஞ்சீவ, மாக்கந்துர மதூஷ், கஞ்சிப்பாணி இம்ரான், கிளப் வசந்த போன்றோர் ராஜபக்ஸர் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்தவர்கள் ஆவர்.

ஆகவே, இலங்கையின் பாதாள உலக கும்பல்களை பற்றி ஆராயும்போது அவர்கள் அரசியல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்களில் தொடர்புபட்டிருக்கிறார்கள். கடந்த கால சாக்கடை அரசியல் கலாச்சாரத்திலேயே இவர்கள் தடையின்றி வளர்ந்திருக்கிறார்கள். இப்பொழுது, அந்தச் சாக்கடை அரசியல் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. திசைகாட்டியின் தலைமையில் மக்கள் நல அரசியல் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும், பாதாள உலகக் குழுக்களின் இயக்கத்துக்கு இன்னமும் முடிவு கட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்கு கொண்வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என பகிரங்கமாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். அதேநேரம், மக்களும் கூர்மைமிக்க புத்தியுடன் பாதாள உலக கும்பல்களை அணுகவேண்டியதும் கட்டாயமானது. இளம்பராயத்தினர் சமூக விரோதிகளின் உடல்வாகு மற்றும் கவர்ச்சியை வர்ணிப்பது, அவற்றை புகழ்ந்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது போன்ற செயல்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமளிப்பவை அல்ல. அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் அறிவியல் ஏழைகளாகவே கருதப்படுகின்றனர். ஆகவே, எல்லா விதமான தீங்குகளையும் க்ளீன் செய்து இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு எல்லா குடிமகன்களுக்கும் உள்ளது.

நன்றி;
சதீஸ் செல்வராஜ்
lankatruth

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments