
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, நாட்டில் பிரிவினை வாதம் நிலவிய காலப்பகுதியில் கிழக்கு மாகாண பள்ளிவாசல் ஒன்றில், படைத்த ரப்புக்கு சிரம் தாழ்த்திய தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட ஷஹீதுகள் சம்பந்தமான வருடாந்த நினைவு கூறல்
கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டு உரையாற்றியதை காண முடிந்தது.
இக்கூட்டத்தில் தாங்கள் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது.
அதாவது இந்தக் கொடூரமான கொலை சர்வதேசமயப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தீர்கள்.
இந்த ஆலோசனையை நான் தலை மீது வைத்து வரவேற்கின்றேன். சிலாகிக்கிறேன்.
இது போன்ற ஆயிரம் நிகழ்வுகள் மறைக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. இவை அனைத்து விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கௌர உறுப்பினர் அவர்களே, இச்சம்பவம் நடந்தது சுமார் 25 வருடங்களுக்கு மேல் ஆகின்றன என நினைக்கின்றேன்.
இதன் பின்பு தாங்கள் சுமார் இரு தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டில் பெரும் பெரும் பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும், குறிப்பாக நீதி அமைச்சர் பதவியும் வகித்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தங்கள் பதவியில் இருக்கும் போது இலகுவாக இக்காரியங்களை செய்ய வாய்ப்புகள் வசதிகள் கிடைத்த போதிலும் அவற்றை செய்யாமல், இன்று கோமாவில் இருந்து எழுந்து வந்துபோல் நீங்கள் உரையாற்றுவது உங்களை நீங்களே நகைப்புக்குள்ளாக்கும் ஒரு விடயமாகும்.
தாங்கள் பதவியில் இருக்கும் போது இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புடனும் அரச கௌரவத்துடனும் பதவிகள் வகித்தாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் உள்ளதை தாங்களும் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

தாங்கள் அமைச்சர் பதவிகளில் இருக்கும்போது, மறைந்த தலைவர், அதாவது தாங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து வைத்துச் சென்ற தலைவர் அவர்களின் மறைக்கப்பட்ட விசாரணைகளை செய்ய கூட சந்தர்ப்பம் இருந்தும் தாங்கள் செய்யவில்லை.
எனவே இந்த இடத்தில் இவ்வாறான ஒரு உரையை நிகழ்த்த தாங்கள் தகுதியற்றவர் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இதிலிருந்து இலகுவாக விளங்கிக்கொள்ள முடிந்த ஒரு விடயம்.
தாங்கள் இன்னும் முஸ்லிம் சமூகத்தை கேடயமாக பயன்படுத்தி அரசியல் செய்கின்றீர்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அரசியல் செய்வது தங்களின் உரிமை. ஆனால் அதற்காக சமூக கஷ்டங்களையும், சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சந்தர்ப்பமாக பயன்படுத்தி அரசியல் லாபம் பெற்று அரசியல் செய்வதை, தாங்கள் உற்பட, முஸ்லிம் அரசியல் வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் பணிவுடன் வேண்டுகின்றேன்.
சமூகத்திற்காக அரசியல் இருக்க வேண்டுமே தவிர, அரசியலுக்காக சமூகம் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.
மேலும் நான் விசேடமாக சுட்டிக் காட்ட விரும்பிக் கொள்வது யாதெனில், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில், முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை செய்த, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய பெருந்தகைகள் கூட அரசியல் மேடைகளில் புனித குர்ஆனையும் புனித சத்தியத்தையும் மேலான அல்லாஹ்வையும் அரசியலுக்காக பயன்படுத்திய வரலாறு கிடையாது.
அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய மார்க்கத்துக்கும் வழங்க வேண்டிய கௌரவத்தையும் கண்ணியத்தை வழங்கினார்கள் என்பதையும் ஞாபகப்படுத்துகின்றேன்.
ஆனால் தங்கள் அரசியல் மேடைகளில், புனித குர்ஆனும் அல்லாஹ்வின் சத்தியமும் அல்லாஹ்வின் பெயரும் சர்வ சாதாரணமாக கேவலமான அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதை தொடர்ந்தும் அவதானிக்க முடிகின்றது.
கடந்த தேர்தல் காலங்களில் தாங்களும், முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா அவர்களும். அசிங்கமான முறையில் ஒருவருக்கு ஒருவர் தூற்றிக்கொண்டதையும், அவை சமூக வலைத்தளங்களில் உலா வந்ததையும், பின்னர் மேடையில் இருவரும், அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கத்தை பற்றியும் பேசியதை அவதானிக்க முடிந்தது.

தங்களின் இவ்வாறான செயல்களுக்கு, அல்லாஹ்வும், அவனது மார்க்கமும் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும்போது,
தங்கள் இச்செயலுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என அறியாத அந்நிய மக்கள்,இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையும் என்று நினைத்துப் பார்க்கும்படி தங்களிடம் தாழ்மையாக வேண்டுகிறேன்.
கடந்த காலத்தில் போகட்டுவைக்கு வாக்களிப்பது ஹராம் என்ன பத்வா வழங்கிய முஷாரப் அவர்கள், பின்பு அந்த ஹராத்தை தனக்குத்தானே ஹலால் ஆக்கி, அந்த அரக்கர்களுடன் சேர்ந்து கொண்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நெஞ்சு துடிக்கத் துடிக்க, ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, தான் ஒரு முஸ்லிம் என்ற உணர்வுடனாவது, அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முஷாரப் அவர்கள் ஒரு எதிர்ப்பு கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
எனவே இவர்களையும், இவர்களின் அரசியலையும் வரலாறு கூறும் மேலான மக்கா வெற்றிக்கு ஈடாகுவது சரிதானா என்பதையும், வரலாறு தெரிந்த ஒரு முஸ்லிம் என்ற கோணத்தில் இருந்து அணுகும்படி தாங்களை பணிவுடன் வேண்டுகின்றேன்.
மேலும், ஈவிறக்கம் இன்றி ஜனாஸாக்களை சுட்டெரித்த கொடுங்கோலன் கோட்டா பே ராஜபக்ச ஜனாதிபதிக்கு, இருந்த அதிகாரத்துக்கு மேலாக மேலும் அதிகாரத்தை வழங்க தாங்கள் ஆடிய நாடகத்தை இந்த நாட்டு முழு முஸ்லிமும் சமூகமும் கண்டுகளித்ததை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
இவர்கள் அத்தனை பேருக்கும் முஸ்லிம் சமூகம் தகுந்த பதிலடி கொடுத்தது. முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் செய்த ஒருவர் கூட இன்று பாராளுமன்றத்தில் இல்லை.
இதற்கான பிரதி பலன்களை கடந்த தேர்தல் காலங்களின் தேர்தல் முடிவுகளில் தங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
எனவே, தாங்கள் உட்பட, தங்களின் சகாக்களால் வங்கரோத்து அடைந்துகொண்டிருக்கும் உங்கள் அரசியலுக்கு உயிரூட்ட, இது போன்ற அரசியலையும் செய்வதற்கு புனித இஸ்லாத்தையும், புனித அருள் மறையையும், படைத்த மேலான ரப்பையும் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இஸ்லாத்தை மாசுபடுத்தும் உங்களின் இவ்வாறான செயலை கலிமா மொழிந்த ஒரு தாயின் கருவில் உதித்த ஒரு அல்லாஹ்வின் அடியானின் கடமை என்ற வகையில் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே இம்மடலை வரைகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி.
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments