Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிப்பது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும் - அதிபர் டிரம்ப்


அமெரிக்கா இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த 182 கோடி ரூபாய் நிதி அளித்தது குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். இதனால் அமெரிக்கா இந்த நிதி திட்டத்தை ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் வாக்குப்பதிவு அளவை அதிகரிக்கச் செய்வதற்காக அமெரிக்கா நிதி அளித்தது ’கிக்பேக் திட்டம்’ என அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் US AID திட்டத்தின் மூலம், 1951-ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகள் நிதி பெற்று வருகின்றன. எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைகளின் நலன், பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் USAID மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த 182 கோடி ரூபாய் நிதி அளித்ததாகவும், இதனை உடனடியாக நிறுத்த உள்ளதாகவும் அமெரிக்க அரசின் திறன் துறைத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மஸ்க்கின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் யார் இந்த நிதியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் காங்கிரஸ்- பாஜக இடையே பெரும் வார்த்தை போரும் மூண்டது.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிடம் அதிக பணம் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் நிதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். உலக அளவில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் விமர்சித்த டிரம்ப், பிரதமர் மோடி நல்ல நண்பர் தான் என்றாலும், அதற்காக நிதி எல்லாம் கொடுக்க முடியாது என்றும் டிரம்ப் காட்டமாக கூறியிருந்தார்.

இதனையடுத்து, இந்தியாவில் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க 182 கோடி ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து வாஷிங்டன்னில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் ஆளுநர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிப்பது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் பெற்ற நிதியை, இந்தியா அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பியதாகவும், பைடன் நிர்வாகத்தால் தன்னைத் தேர்ந்தெடுக்க விடாமல் செய்ய முயற்சி நடந்ததாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

news18

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments