
இலவசமாக கறிகொடுக்க கறிக்கடைக்காரர் மறுத்ததால் வாடிக்கையாளர் ஒருவர் சடலத்துடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டி பகுதியில் மணியரசன் என்பவர் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருகிறார்.அதேபகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மணியரசன் கறி வாங்கும் போது பணம் வாங்காமலிருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் காலையிலிருந்து வாடிக்கையாளர்கள் மணியரசன் கடைக்கு இறைச்சி வாங்க வந்துள்ளனர். அப்போது கடையில் கறிவெட்டி கொண்டிருந்த மணியரசனிடம் குமார் இலவசமாகக் கறி கேட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கறி கொடுப்பதற்கு மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த குமார் மணியரசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து எலும்புக்கூடாக்க இருக்கும் சடலம் ஒன்றை எடுத்து வந்து கடையின் முன்பு வைத்தார்.
இதனைக் கண்ட வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பழனிச் செட்டிபட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது . உடனடியாக வந்த காவல்துறையினர் குமார் எடுத்துவந்த சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் குமாரைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று சடலம் எங்கு இருந்து எடுத்துவரப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ibctamilnadu

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments