
அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக, இந்திய வம்சாவளியான காஷ் படேல் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் FBI என்பது உள்நாட்டு உளவு மற்றும் சட்ட அமலாக்கத் துறையாகும். மிகவும் சக்திவாய்ந்த இந்த முகமையின் இயக்குநர்களாக அமெரிக்கர்களே காலம்காலமாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை, FBI-யின் இயக்குநராக நியமிக்க அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர விசுவாசியான காஷ் படேலுக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன.
இதை தொடர்ந்து, 45 வயதான காஷ் படேலை FBI-யின் இயக்குநராக அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்தார். செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மீது சத்தியம் செய்தபடி FBI இயக்குநராக காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், உலகின் மிகப் பெரிய நாட்டின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள் என தெரிவித்தார். FBI-க்கு உள்ளேயும், அதற்கு வெளியேயும் பொறுப்புடன் செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.
டிரம்ப்பின் குடியரசுக் கட்சி செனட்டர்களான சூசன் காலின்ஸ், லிசா முர்கோவ்ஸ்கி ஆகியோரும் காஷ் படேலின் நியமனத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். 2021-இல் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவு கலகக்காரர்களைப் பாதுகாத்ததாகக் கூறி படேல் நியமனத்தை ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்தனர். செனட்டின் ஒப்புதல் பெற்ற பின்னர் பேசிய காஷ் படேல், FBI- யை மீண்டும் வெளிப்படைத் தன்மையுடன் உருவாக்க உள்ளதாகக் கூறினார். முன்னதாக, செனட் சபையில் காஷ் படேல், தனது தாய் மற்றும் தந்தையின் கால்களில் விழுந்து ஆசிபெற்றார்.
காஷ் படேலுக்கு டிரம்ப் ஆதரவாளர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, டிரம்பின் உதவியாளர் டான் ஸ்கவினோ, பாலிவுட் ஸ்டைலில் காஷ் படேலை வரவேற்றுள்ளார். பிரபல பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்தில் வரும் மால்ஹாரி பாடலில் ரன்வீர் சிங்கிற்கு பதிலாக காஷ் படேலின் முகத்தை பொறுத்தி வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காஷ் படேல் 1980-ஆம் ஆண்டு, நியூயார்க்கின் கார்டன் சிட்டியில், இந்தியாவைச் சேர்ந்த குஜராத்தி தம்பதிக்கு பிறந்தார். அவரது பெற்றோர் முதன்முதலில் 1970களின் தொடக்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் உகாண்டாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர்கள் இன ஒடுக்குமுறையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். படேலின் தந்தை தனியார் விமான நிறுவனத்தில் நிதி அதிகாரியாக இருந்தவர். படேல், லாங் தீவில் உள்ள கார்டன் சிட்டி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
பின்னர் இளங்கலைப் படிப்பை ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும் சட்ட மேற்படிப்பை நியூயார்க் பல்கலைகழகத்திலும் முடித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், உளவுத்துறைக்கான நிரந்தர தேர்வுக் குழுவின் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
ட்ரம்ப் ஆட்சியில் இந்திய வம்சாவளியினருக்கு தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட ஜெய் பட்டாச்சார்யா, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சண்டிகரை பூர்வீகமாகக் கொண்ட ஹர்மீத் கே. தில்லான், சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன், செயற்கை நுண்ணறிவு தொடர்பான வெள்ளை மாளிகையின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments