
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி லாகூரில் பத்தாவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் போராடி 273 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக செதிகுல்லா அடல் 85, ஓமர்சாய் 67 ரன்கள் எடுத்து அசத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பென் துவாரிஸ் 3, ஸ்பென்சர் ஜான்சன் 2, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட் 20 ரன்களில் ஓமர்சாய் வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 59* (40) ரன்கள் விளாசினார். அவருடன் கேப்டன் ஸ்மித் 19* ரன்கள் எடுத்ததால் 12.5 ஓவரில் ஆஸ்திரேலியா 109-1 ரன்களை எடுத்த போது வந்த மழை போட்டியை நிறுத்தியது.
2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் இந்தப் போட்டியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதையும் சேர்த்து 3 போட்டிகளில் 1 வெற்றியுடன் 4 புள்ளிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா செமி ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா (+2.140) ரன்ரேட் அடிப்படையில் 3 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்தில் இருக்கிறது. எனவே தங்களது கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்தால் தென்னாப்பிரிக்கா செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். மறுபுறம் அதே 3 புள்ளிகளை கொண்டிருந்தாலும் (-0.990) ரன்ரேட் கொண்டிருப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டுமெனில் தென்னாப்பிரிக்கா அணியை இங்கிலாந்து குறைந்தபட்சம் 207 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
சேசிங் செய்தால் நிர்ணயிக்கப்படும் இலக்கை 11.1 ஓவரில் இங்கிலாந்து எடுத்து வெற்றி பெற வேண்டும். ஆனால் அந்த இரண்டுமே அசாத்தியமான ஒன்று என்று சொல்லலாம். அதன் காரணமாக சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறும் ஆப்கானிஸ்தான் கனவு உடைந்துள்ளது. அதற்கு மழையும் ஒரு காரணமாக இருந்தது ஆப்கானிஸ்தான் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments