
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை பலூச் விடுதலை ராணுவ அமைப்பினர் நேற்று முன் தினம் சிறைபிடித்தனர். போலான் மாவட்டத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே சுரங்கப் பாதையில் ரயில் நுழைந்த போது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாஃபர் விரைவு ரயில் தடம் புரண்டது. இதனைப் பயன்படுத்தி பலூச் அமைப்பினர் ரயிலை சிறைபிடித்தனர்.
ஒன்பது பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் சில பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் பலூச் விடுதலை ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 400-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து ராணுவம் வரவழைக்கப்பட்டு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இரு தரப்பிற்கும் இடையே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து முதல்கட்டமாக ஆண்கள், பெண்கள் என 155 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்களை நெருங்கினால் பிணைக்கைதிகள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என்று கிளர்ச்சியாளர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். 48 நேரத்திற்குள் பாகிஸ்தான் சிறையில் உள்ள தங்களது அமைப்பை சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தவறினால் ரயிலை வெடிக்கச்செய்வோம் என்றும் கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்தனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வந்தது. ராணுவத்தின் தொடர் முயற்சியால் 33 கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர். ரயிலில் சிக்கியிருந்த பிணைக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பயணிகள் 21 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ரயிலில் சிக்கியிருந்த 346 பிணைக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதில், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கிளச்சியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் மீட்பு பணி நிறைவுக்கு வந்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments