Ticker

6/recent/ticker-posts

பூமிக்கடியில் ஏவுகணை நகரம்... அமெரிக்கா மிரட்டலுக்கு வீடியோ வெளியீட்டு பீதியை கிளப்பிய ஈரான்


அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் அரசை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டிவரும் நிலையில், தங்களது ராணுவப் பலத்தை நிரூபிக்கும் வகையில், பூமிக்கடியிலுள்ள ஏவுகணை நகரத்தின் வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. அதில், சர்வதேசத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக, தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டது.

2017-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், ஓராண்டில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்..

ஈரான் அணுஆயுதங்களை தயாரிப்பதை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சமீபத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனேனிக்கு ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார். அதில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், வேறு விதமாக அதனை முடிக்க வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அது மட்டுமல்லாமல், ஈரானுக்கு 2 மாதங்கள் கெடுவும் விதித்திருந்தார்.

ட்ரம்ப்பின் கடிதத்திற்கு பதிலளித்த ஈரான் அதிபர் மசூத், அமெரிக்கா உத்தரவுகள் வழங்குவதையும், அச்சுறுத்தல்கள் விடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்

இந்த நிலையில், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், ஆயிரக்கணக்கான நவீன ஏவுகணைகளை, ஈரான் நாட்டு ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

ஈரானின் ராணுவப் பலத்தை காட்டும் விதமாக, 85 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ராணுவ தளபதி முகமது ஹுசைன் பகேரி மற்றும் விண்வெளிப் படைத் தலைவர் அமீர் அலி ஹாஜிசாதே, ஜீப்பில் சென்று பார்வையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன..

இதேபோன்று, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை அறிமுகப்படுத்தத் தொடங்கினால், முழுமையாக வெளிப்படுத்தி முடிப்பதற்கு அடுத்த 2 ஆண்டுகள் போதாது என்றும் ஈரான் கூறியுள்ளது. அணுஆயுத பலம், ஈரானின் எதிரிகளாக கருதப்படும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments