
ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
2024-25 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வீரர்கள் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும், தனியாக பயணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு 45 நாள் சுற்றுப்பயணத்தின்போதும் வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியானது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போதும் வீரர்களின் குடும்பத்தினர் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்படவில்லை.
இந்த விதிமுறைகள் குறித்து இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி, கருத்து தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணங்களின்போது ஏற்படும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் இருந்து மீள குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் அவசியமானது என்பதை பலரும் உணரவில்லை. குடும்பத்தினரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் இதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்த முடிவுகளை எடுக்கும்போது, நிலைமையைப் புரிந்து கொண்டவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர்கள் நல்ல மனநிலையில் இருப்பது அவசியம் என்றும், அப்படி இருந்தால் தான் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிவித்தார். நான் நன்றாக இருந்தால் தான் கடமையை முடித்துவிட்டு மீண்டும் வாழ்க்கையை பார்க்க முடியும். ஒரு மோசமான ஆட்டத்திற்கு பிறகு, எந்த வீரருக்கும், தலையை அடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது பிடிக்காது என்று தெரிவித்தார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதே நிலைச்சியில் விராட் கோலி பதிலளித்தார். தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சாதனைகள் பற்றிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்ற கேள்விக்கு, சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து பதிவிடுவதால் தனக்கு எந்த திருப்தியும் கிடைக்காது என்றும், தான் பதிவிட்டாலும் இல்லாவிட்டாலும், வெற்றி என்பது வெற்றிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பம் சில சமயங்களில் கவனச் சிதறலை ஏற்படுத்துவதாகவும், தனது விளையாட்டு வாழ்க்கையில் தான் இதை அனுபவித்ததாகவும் கோலி கூறினார். இன்றைய இளம் வீரர்களை விட தான் அதிர்ஷ்டசாலி என்றும், தான் வளர்ந்தபோது ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றும், எனவே தனது கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது தான் சமூக வலைத்தளங்களை குறைவாகவே பயன்படுத்துவதாகவும், இதனால் தனது விளையாட்டிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றங்களை உணர்வதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments