
பெங்களூருவில் மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 35 வயதான ராகேஷ். இவரது மனைவி 32 வயதான கெளரி அனில் சாம்பேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்கள் வேலைக்காக பெங்களூருவுக்கு குடியேறினர். இதனையடுத்து உளிமாவு காவல் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டகம்மனஹள்ளி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ராகேஷ் ஐடி நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வந்தார். கெளரி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டை கவனித்து வந்தார். ராகேஷுக்கு வொர்க் ப்ரம் ஹோம் என்பதால் கணவன் மனைவி இருவரும் எப்போதும் வீட்டிலேயே இருப்பது வழக்கம்.
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சாதாரண குடும்ப சண்டை என அக்கம்பக்கத்தினரும் கண்டுக்காமல் விட்டுள்ளார். இதற்கிடையே தான், அப்படியொரு கொடூர சம்பவத்தை ராகேஷ் அரங்கேற்றி உள்ளார். கடந்த 26 ஆம் தேதி வழக்கம்போல் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் ஆத்திரத்தை வெளி காட்டியுள்ளனர். அதில் பொறுமையை இழந்த ராகேஷ், தனது மனைவி என்றும் பாராமல் தன் நிலை மறந்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கெளரியின் வயிற்றில் குத்தி கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார். ரத்தம் வழிய வலியால் சரிந்த கெளரி துடிதுடித்து கணவன் கண்முன்னே உயிரை விட்டுள்ளார். சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு திரும்பிய ராகேஷ் மனைவியை கொலை செய்ததை நினைத்து கத்தி கதறி அழுதுள்ளார். இருப்பினும் போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மனைவியின் உடலை சூட்கேஸில் அடைத்து யாருக்கும் தெரியாமல் வெளியில் கொண்டு போய் போட்டுவிடலாம் என திட்டமிட்டுள்ளார். ஆனால் முழு உடலும் சூட்கேசுக்குள் போகாது என்பதால், மனைவியின் உடலை துண்டு துண்டாக கூறு போட்டு சூட்கேசில் திணித்துள்ளார்.
பிறகு உடலை எங்கு கொண்டு வீசுவது என தெரியாமல் திணறியவர் இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என்று நினைத்து, கெளரியின் பெற்றோருக்கு போன் செய்துள்ளார். அதன்படி போனில், "நான் உங்கள் மகளை கொன்று விட்டேன். உடலை வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்துள்ளார். இதனால் துடிதுடித்துப்போன பெற்றோர், கதறி அழுதபடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறினர். உடனே மகாராஷ்டிரா போலீசார், பெங்களூரு போலீசாரை தொடர்புகொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், தம்பதியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்ததில், குளியறையில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் கெளரியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தன. தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்து கெளரியின் உடல் பாகங்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிய அதிகாரிகள், ராகேஷை தேடி களத்தில் இறங்கினர். இப்படியொரு கொடூர செயலை செய்து விட்டு அவர் எங்கே சென்றார்? என அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர்.
இதற்கிடையில் ராகேஷ் தனது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் காரில் பயணித்ததால் லோகேஷனை ட்ரேஸ் செய்த போலீசார் சதாரா பகுதியில் அவர் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அங்கு விரைந்த போலீசார், கார் ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் கிடந்த ராகேஷ் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மனைவியை கொலை செய்து விட்டு அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின்னர் கொலைக்கான காரணம் உண்மை என்பது குறித்து விசாரணை தொடர உள்ளனர்.
விசாரணையின் முடிவிலேயே கெளரி கொலையின் உண்மை பின்னணி என்ன என்பது குறித்து தெரியவரும். மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments