Ticker

6/recent/ticker-posts

Ad Code



Sunita Williams: பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. என்னென்ன சவால்களை எதிர்கொள்வார் தெரியுமா?


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் மேற்கொண்டுவரும் ஆய்வை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்ப தயாராகி வருகிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்து வர ஒரு வழியாக ராக்கெட் புறப்பட்டு விட்டது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் அடுத்த வாரம், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

பூமியிலிருந்து சுமார் 408 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், சுமார் 9 மாதங்களாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பட்சத்தில், அவர் உடல் ரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொள்வார் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூளை, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் கடுமையான மாறுதல்கள் இருக்கும் என கடந்த ஆண்டு, ஸ்பேஸ்எக்சின் 4-வது குழுவினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தலைவலியால் அவதியுறுவார்கள் என்றும் தெரியவந்தது.

நமது பூமி வளிமண்டலம் மற்றும் காந்த மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதால், விண்வெளி கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. ஆனால் விண்வெளியில் இருப்பவர்கள், அதிக அளவிலான கதிர் வீச்சுக்கு ஆளாகின்றனர். இதனால் மரபணு பாதிப்பு மற்றும் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், உடலிலுள்ள திரவங்கள் மேல் நோக்கி, அதாவது தலையை நோக்கி பாய்வதால், மண்டையோட்டுக்குள் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் முக வீக்கம், பார்வை மங்குதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

பூமி திரும்பும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை எலும்பு அடர்த்தி இழப்பு. 9 மாதங்கள் புவியீர்ப்பு விசையின்றி வசித்த சுனிதா வில்லியம்ஸ், ஒரு பென்சிலை தூக்கக் கூட சிரமப்படுவார் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல்ரீதியாக மட்டுமன்றி, மன ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மிக குறுகிய இடத்தில் அதிக நாட்கள் இருப்பது உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் மற்றவர்களுடன் பழகுவதில் பிரச்னைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாமல் மறுக்கும் சுனிதா வில்லியம்ஸ், தான் நலமுடன் இருப்பதாக கூறுகிறார்..

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments