Ticker

6/recent/ticker-posts

Ad Code



"நிழல் தந்த பரிசு" -1


சிவப்புநிற அஞ்சல் பெட்டியின் பழுப்பு நிறக் காகிதம்!

தலை நகரில் கலைத்துறையின் அனைத்து விதானங்களையும் ஓரிடத்தில் கொண்டுள்ள கலைக் கல்லூரி 'லொயோலா'. கொழும்பு மழை அதன் துளிகளை 'லொயோலா' கல்லூரி மைதானத்தின் மேல் கொட்டும் வேளையில், சிந்துவின் மனம் மேகங்களின் சாயலை ஒத்திருந்தது!

அவள் மலையகத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்துள்ள ஊடகத்துறையின் இறுதி வருட மாணவி. 'வேட்டை' இணையத்தள சஞ்சிகையின் புலனாய்வுத்துறை ரிப்போட்டராகப் பகுதிநேரப் பணி செய்பவள்;  கல்லூரி நிகழ்வுகளில் ஒளிந்துள்ள உண்மைகளையும்  தன் புலனாய்வுக் கண் கொண்டு தேடுபவளுமாவாள்.

மழை விழும் சத்தம் ஹாஸ்டல் பக்கம் ஓடும் மாணவர்களின் காலடிச் சத்தங்களோடு ஒன்றறக் கலந்து புதிய இசை அமைத்தது.

வாராண்டாவின் பழைய சுவர் ஒன்று; பக்கத்தில் ஒரு பழமையான அஞ்சல் பெட்டி; அங்கு அவளது பார்வை
அங்கு நிலைத்து நின்றது.

பழைய அஞ்சல் பெட்டி... அது நீண்ட காலம் கைவிடப் பட்டிருந்ததனால், யாரும் அதில் எவரும் கடிதம் போடுவதில்லை. ஆனால் இன்று அதில் ஏதோ ஒன்று சொருவப்பட்டிருந்தது.

அந்த சிவப்புநிற அஞ்சல் பெட்டியின் வாயிலில் 

பழுப்பு நிறக்காகிதம்; அது சற்று வெளியில் தள்ளித் தெரிந்தது. 

அருகில் சென்ற சிந்து அதனை இழுத்தெடுத்தாள்!
உறை மழையினால் ஓரங்கள் நனைந்திருந்ததால், அது அண்மையில்தான் சொருவப்பட்டுள்ளது என்பதை அவள் புரிந்து கொண்டாள். 

உறையின் மேல் "சோமு" என்ற மூன்றெழுத்தைக் கண்டதும் சிந்துவுக்குள் ஓர் அதிர்ச்சி!

அவள் உறையை மெதுவாகப் பிரித்தாள். அவளது இதயத்தின் துடிப்பு மெல்ல மெல்ல சத்தமாகக் கேட்க ஆரம்பித்தது.

கடிதத்தைப் படித்தாள்.

“நீங்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. கல்லூரி நிலம் குறித்து பேச வேண்டாமென்று உத்தரவு வந்தது. ஆனால் எனக்குப் பயமாக இருக்கிறது; என்னை அவர்கள் மறைத்து விடுவார்கள் என்று!
உங்கள்,
"சோமு”

கடிதத்தை வாசித்தவுடன் சிந்துவின் துப்பறியும் மூளை செயல்படத் தொடங்கியது.

சோமு மாஸ்டரை ஒரு மாதமாகக் காணவில்லை. கல்லூரி மேலிடம் “சாதாரண விடுமுறை” என்று 

குறிப்பிட்டதைத்தான் ஆசிரியர்களும், மாணவர்களும் அறிந்திருந்தனர்; ஆனால், கடிதத்தைப் படித்த சிந்துவால், சோமு மாஸ்டரின்  இந்த மாய மறைவு சாதாரணமானது என்று நம்ப முடியவில்லை!

அவர் அடிக்கடி மாணவர்களிடம் சொல்வதுண்டு – “சரியான தருணத்தில் கேட்கப்படும் ஒரு கேள்வி, ஒரு புரட்சியைத் தூண்டும்!” என்று!

இப்போது அந்த கேள்வி அவளிடத்தில் வந்துள்ளது.

கல்லூரி வரண்டாவுக்குள் சென்ற அவள், அருணைத் தேடினாள்.

அவன் ஒரு புகைப்படக் கலைத்துறை மாணவன்; ஊடகத்துறை ஒன்றியத்தில், அவளின் நெருங்கிய தோழன்.

"அருண்....!" அவளது குரலில் ஒரு பதட்டம்.

வராண்டா சேரில் அமர்ந்து, தன் கெமராவுக்குள் புதைந்திருந்த  அவன்  தலையை மேல் தூக்கினான். 

“என்ன சிந்து, ஏதாவது பிரலயம் வந்து விட்டதா?"

“ரகசியமான ஒரு கேள்விக்குப் பதில் கிடைச்சிருக்கு,” 

ஒரு புன்னகையோடு... கண்கள் பளிச்சிட...அவள் கூறினாள்!

“சோமு மாஸ்டர்…விடுமுறையில் செல்லவில்லை... காணாமல் போயுள்ளார்...இதைப் பார்.”

அவள் கடிதத்தை நீட்டினாள்.

அருண் படித்துவிட்டு மெதுவாகக் கூறினான்,

"இதில் பயம் மட்டுமல்ல… எச்சரிக்கையும் இருக்கிறது!"

மழை நின்றது; ஆனால் அவர்கள் இருவரும் நிற்கவில்லை. அந்த அஞ்சல் பெட்டிக் கடிதம்... அவர்களைத் துறத்தி; அவர்களுக்குள் ஒரு தேடலைத் தொடங்க வைத்தது!

(தொடரும்)


Email;vettai007@yahoo.com



Post a Comment

0 Comments