Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-60


மனச்சஞ்ஜலங்களோடு தன் கால்போன போக்கில் நடக்கத் தொடங்கிய சிங்கினி, அலவத்தையைக் கடந்தவளாகக்   காததூரம் நடந்து சென்று  காட்டுக்குள் நுழைந்தாள்!

மான்களும், மரைகளும் நிறைந்து வாழ்கின்ற காடு!  தன் காதலி ரெங்க்மாவுக்கு ஆபரணம் செய்து கொடுப்பதற்காக செரோக்கி முதன் முதலாக மான் வேட்டையாடிய காடு! 

புதுமணத் தம்பதியினரை முதலிரவைக் கழிக்க, கிராமத்து உறவுகள் வனத்துக்குள் விரட்டிவிட்டபோது,  தந்திரமாக முன்கூட்டியே செரோக்கி  மரமேடை அமைத்து வைத்திருந்த காடு! 

அந்தக் காட்டுக்குள் நுழைந்த சிங்கினி, தள்ளாடியபடி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தாள்!

அப்போதுதான் அந்த மரம் அவள் கண்களில் பட்டது!  அடிவாரத்தில் மலர்கள் விழுந்து கிடந்ததால் அது அவளது  கண்களுக்கு விருந்தாயின!

மரத்தை அண்ணார்ந்து பார்த்தாள்; அதன்மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையும், மேடையிலிருந்து தரை தொடும்வரை தொங்கிகொண்டிருந்த  வேர்க்கொடி ஏணியும் அவளை  நிலைக்கச் செய்து, ஏணியைப் பிடித்து  ஏறவைத்தது!

அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த மரமேடையைக்  கண்டதும் அவள் அதிசயித்தாள்!  பட்டைகள் பல விரிக்கப்பட்டு, வண்ண மலர்கள் தூவப்பட்டிருந்த மேடையில், சிதைந்துபோன மலர்களையும், ஆங்காங்கே  சிதறிக்கிடந்த பழங்களையும்  அவள்  கண்டாள்!

பட்டைக்குள் பாதி உடைந்த நிலையில் தேன்மதை நசுங்கிக் கிடந்ததைக்  கண்ட சிங்கினியின் வாயில் ஜலம் ஊறியது!

தன் வருகையை எதிர்பார்த்து, தனக்காக யார் இவற்றை யெல்லாம் செய்து வைத்தார்கள் என்று கூட ஒரு கணம், ஒரே ஒரு கணம் அவள் எண்ணலானாள்!

செரோக்கியும், ரெங்க்மாவும் தங்கள் முதலிரவை இங்குதான் கழித்திருப்பார்கள்   என்பதை உணரும் மனநிலை கொண்டிராத சிங்கினி, சிதறிக்கிடந்த பழங்கள் சிலதைப் பொறுக்கி, வெறித்தனமாக கடித்து உண்டு விட்டுப்பெரியதொரு ஏப்பத்தை விட்டவள், தேன்மதையை ருசித்துபார்த்துக் கொண்டிருந்தபோது,  அசதி மிகுதியால் அங்கேயே, அப்படியே தூங்கிவிட்டாள்!

(தொடரும்)

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com



Post a Comment

0 Comments