
இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 26 சதவீதமாக உயர்த்தி பதிலுக்கு பதில் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பால் இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வர்த்தக வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் வரி உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என நீண்டு கொண்டே போகிறது அமெரிக்காவின் வரி உயர்வு படலம். அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய தொழில்துறை கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் அபாயம் நிலவுவதாக கருதப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக நிபுணர்களின் கருத்துகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் குறைவான பாதிப்புகளே இருக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், சீனா, ஜப்பான், வியட்நாம், இலங்கை போன்று ஏற்றுமதியை சார்ந்து இந்தியா இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்காவின் திடீர் வரி உயர்வால் இந்திய ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாக திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்காவின் வரி விதிப்பை பயன்படுத்திக் கொண்டு மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பார் திட்டங்களின் கொள்கையை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டயக் கணக்காளர் சுந்தரராமன் வலியுறுத்தி உள்ளார். பின்னலாடைத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் வரி உயர்வு உதவியாக இருக்கும் என இந்திய ஜவுளி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறுகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் உருவாகும் பணவீக்கத்தால் அந்நாட்டு மக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளதாக தணிக்கையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்களின் கருத்துகள், இந்திய தொழில்துறைக்கு ஆதரவாக உள்ள நிலையில், வரி உயர்வு குறித்து அமெரிக்காவுடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்பதால் விரைவில் பெரிய அளவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments