
குறள் 943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
ரொம்ப நாள் உயிரோடு இருக்கணும்னா, சாப்பிட்ட சாப்பாடு செரிமானம் ஆயிட்டான்னு தெரிஞ்சுக்கிட்டு, தேவையான அளவு தான் சாப்பிடணும்.
குறள் 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
மொதல்ல சாப்பிட்ட சாப்பாடு நல்ல செரிமானம் ஆயிட்டான்னு தெரிஞ்சுக் கிடணும். அடுத்தாப்ல பசி எடுக்கும் போது நம்ம ஒடம்புக்கு ஒத்து வரக்கூடிய சாப்பாட்டை சாப்பிடணும்.
குறள் 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
நம்ம ஒடம்புக்கு ஒத்துவரக் கூடிய சாப்பாடா இருந்தாக் கூட, தேவைக்கு கூடுதலா சாப்பிடாம இருந்தா போதும். உயிருக்கு எந்த தொல்லையும் வராம இருக்கும்.
குறள் 946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
எதையும் அளவோடு சாப்பிட்டா, இன்பம் நம்ம கிட்ட எப்பமும் நிலைச்சு இருக்கும். அளவு இல்லாம அள்ளி அள்ளி உள்ள தள்ளுனா, ஒடம்புக்கு சீக்கு தான் வரும்.
குறள் 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
வயித்துப் பசி எம்புட்டு இருக்குன்னு தெரியாம அளவு இல்லாம வயிறு முட்டச் சாப்பிட்டா, அதுனால வார சீக்கும் அளவு இல்லாம ரொம்பத் தான் இருக்கும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments