
துபாய் மோலின் ஆடம்பரம் மனதை அள்ளியது. பளபளக்கும் தரைகள்; வானைத் தொடும் கண்ணாடிக் கூரைகள்; வண்ண விளக்குகளால் மின்னும் கடைகள்... எல்லாமே ஒரு கனவுலகம்!
அதன் மையத்தில், புர்ஜ் கலீஃபாவின் நிழலில், நீர்த்தடாகம் தன் நடனத்தால் உல்லாசப் பயணிகளை மயக்கியது!
நீரூற்றுக்கள் இசையுடன் உயர்ந்து ஆட,
அங்கே நின்றிருந்தவள்... அவள்... என் இதயத்தை மீண்டும் திருடினாள்!
பல ஆண்டுகளுக்கு முன்... பல்கலைக் கழக நாட்களில் அவளை நான் முதன் முதலாக சந்தித்தேன்.
ஆர்த்தி! அவள் புன்னகை அப்போது ஒரு கவிதையாகவும், அவள் பேச்சு ஒரு பாடலாகவும் இருந்தது. ஆனால், வாழ்க்கையின் திருப்பங்கள் எங்களை பிரித்து விட்டன.
இப்போது, இந்த ஆடம்பர மோலில், அவளை மீண்டும் பார்ப்பேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
மெல்ல அவளை நெருங்கினேன். அவள் மரச்சட்டத்தைப் பிடித்தபடி, நீர்த்தடாகத்தை ரசித்துக் கொண்டு நின்றிருந்த அவள் முகத்தில் பழைய கனவுகளின் நிழல் தெரியவில்லை!
"ஆர்த்தி?” என்று மெல்ல அழைத்தேன்.
அவள் திரும்பினாள். அந்தக் கண்களில்...அதே மின்னல்; ஆனால் ஒரு சோகம்!
“அர்ஜுன்?” அவள் குரலில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்து வெளி வந்தது!.
“நீ இங்கே எப்படி?”
சிரித்தபடி அருகில் சென்றேன்.
“ஓய்வுக்காக வந்தேன். நீ?”
“நானும்... சில நாட்களாக இங்குதான் இருக்கிறேன்,” என்றாள், ஒரு நமட்டுப் புன்னகையுடன்.
எங்கள் பேச்சு பழைய நினைவுகளை அள்ளியது. பல்கலைக் கழக நாட்கள்...மழையில் நனைந்து பேராதனைப் பூங்காவுக்குள் நடந்து மகிழ்ந்த மாலைப் பொழுதுகள்...மறக்க முடியாத காதல்!
ஆனால், அவள் கண்களில் ஒரு மறைமுக கலக்கம் தெரிந்தது...ஏதோ சொல்லாமல் விடுவதுபோல் இருந்தது!
நாங்கள் நீர்த்தடாகத்தை விட்டு, மோலின் உணவகப் பகுதிக்கு நடந்தோம்.
புர்ஜ் கலீஃபாவின் உயரம் தெரிந்தது; அதற்குள் இரவு விளக்குகள் மின்னின.
ஓர் இத்தாலிய உணவகத்தில் அமர்ந்து, பாஸ்தா ஆர்டர் செய்தோம்.
ஆர்த்தி சிரித்தாள்; பேசினாள்; ஆனால் அவள் கைகள் நடுங்குவதை என்னால் கவனிக்க முடிந்தது.
“என்ன ஆச்சு, ஆர்த்தி? ஏதாவது பிரச்சனையா?” நான் கேட்டேன்.
மௌனமாக இருந்த அவள், பின்னர்...மெதுவாகச் சொன்னாள்,
"அர்ஜுன், நான் இங்கே ஓய்வுக்கு வரல. ஒரு பிரச்சனையிலிருந்து விடுபட வந்தேன்.
என் இதயம் படபடத்தது.
“ஆ... பிரச்சினையா? உனக்கா? என்ன பிரச்சனை?”
அப்போதுதான்...அவன் தோன்றினான்!
உயரமான, கருப்பு சூட்டில், கண்களில் கொடூர பளபளப்புடன், அவன் எங்கள் மேசைக்கு அருகில் வந்து நின்றான்.அ
"ஆர்த்தி, யாரிவன்? இவனுடன் உனக்கு என்ன பேச்சு?” அவன் குரல் கூர்மையாக இருந்தது.
நான் எழுந்தேன்.
"நீ யார்?” என்றேன்.
அவன் சிரித்தான், ஆனால் அது ஒரு பாம்பின் சிரிப்பு!
“நான் விக்ரம். ஆர்த்தியின்... மேலாளன்” அவன் வார்த்தைகளில் ஒரு மிரட்டல் இருந்தது.
ஆர்த்தி பயந்த குரலில்,
“அர்ஜுன், இவன் என்னை விடமாட்டான். நான் இவனுடைய நிறுவனத்தில் வேலை செய்தேன். ஆனால், இவன் ஒரு மோசடிக்காரன். அதை அறிந்த நான் அவனிடமிருந்து தப்பித்து வந்தேன்.”
விக்ரம் மேசையில் கைகளை ஊன்றி,
"ஆர்த்தி, நீ எங்கே ஓடினாலும், உன்னை கண்டுபிடிப்பேன். அந்த ஆவணங்கள் முதலாளிக்கு வேணும்.” என்று கர்ஜித்தான்.
என் மனம் வேகமாக ஓடியது.
"ஆர்த்தி, இவனை நாம் கையாளலாம்,” என்று மெதுவாக சொன்னேன்.
ஆனால், விக்ரம் தன் ஜாக்கெட்டில் கைவிட்டான். அதற்குள் ஒரு துப்பாக்கியின் அடையாளம் தெரிந்தது.
“இங்கே அமைதியா இரு, இல்லைன்னா இந்த மோல் முழுக்க கூச்சலாகயிடும்,” என்று மிரட்டினான்.
"நான் அர்ஜுன். உன்னைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்வேன்... ஆர்த்தி! என்னை நம்பு,” என்று அவள் கையைப் பிடித்தேன்.
திடீரென, மேசையில் இருந்த பூவாசை எடுத்து விக்ரமின் முகத்தில் வீசினேன். அவன் தடுமாறிய நொடியில், ஆர்த்தியை இழுத்துக் கொண்டு ஓடினேன்.
துபாய் மோலின் கூட்டத்துக்குள் நாங்கள் ஓடினோம். விக்ரம் ஓடிவரும் காலடிச் சத்தம் பின்னால் கேட்டது. நீர்த்தடாகத்தைத் தாண்டி, மோலின் பாதுகாப்பு அலுவலகத்தை நோக்கி ஓடினோம்.
ஆனால், விக்ரமின் ஆட்கள் எங்களைத் துரத்தினர். புர்ஜ் கலீஃபாவின் விளக்குகள் எங்களைப் பார்த்து மின்ன, நாங்கள் மோலின் மறைவான ஒரு பகுதியில் ஒளிந்தோம்.
ஆர்த்தி மூச்சு வாங்கினாள்.
“அர்ஜுன், உன்னிடம் இவ்வளவு தைரியமா?”அவள் கேட்டாள்; நான் அவள் கண்களைப் பார்த்தேன்.
“உனக்காக எதையும் செய்வேன், அப்போவும், இப்போவும்.”
அவள் கண்கள் கலங்கின.
"நான் அப்போ உன்னை விட்டு போனது தப்பு. ஆனால், இப்போ உன்னை விடமாட்டேன்.”
அந்த நொடியில், விக்ரமின் ஆட்கள் எங்களைக் கண்டனர்.
ஆனால், மோலின் ஆபிரிக்க பாதுகாப்பு காவலர்கள் சரியான நேரத்தில் வந்தனர். விக்ரமையும் அவன் கூட்டாளிகளையும் இழுத்துச் சென்றனர்.
நாங்கள் மீண்டும் நீர்த்தடாகத்துக்கு வந்தோம். புர்ஜ் கலீஃபா எங்களை ஆசீர்வதிப்பது போல மின்னியது.
ஆர்த்தி என் கையைப் பிடித்தாள்.
“இனி நாம் பிரிய மாட்டோம்" என்றாள்.
நான் அவளை அணைத்துக் கொண்டேன். நீர்த்தடாகத்தின் இசை எங்கள் காதலை கொண்டாடியது!
தடாகத்து இசை காற்றில் மிதந்தது. புர்ஜ் கலீஃபாவின் விளக்குகளின் ஒளி, துபாய் மோலின் கண்ணாடி முகப்பில் பிரதிபலித்து, இரவை ஒரு மாய உலகமாக மாற்றின.
ஆர்த்தியின் கை என் கையை இறுக்கமாகப் பற்றியிருந்தது. விக்ரமும் அவன் ஆட்களும் கைது செய்யப்பட்டாலும், அவள் கண்களில் ஒரு பயம் இன்னும் மறையவில்லை.
“அர்ஜுன், இது முடிஞ்சிருச்சுன்னு நினைக்காத,” என்றாள் ஆர்த்தி, குரலைத் தாழ்த்தி.
“விக்ரம் ஒரு பெரிய கும்பலுடைய சிறு பகுதிதான். அவனுக்கு மேலவும் ஒரு பெரிய முதலாளி இருக்கான். அவனுக்கு என் மேல கோபமிருக்கு".
நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.
“யாரு அந்த முதலாளி? நீ இன்னும் என்கிட்ட எதையோ மறைக்கிற?.”அவள் தயங்கினாள்.
பின்னர், ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன்,
“அவன் பேர் அல்வான் ரஷீத். துபாயின் பெரும் செல்வந்தன். விக்ரமுக்கு ஆவணங்களை கொடுக்காம நான் தப்பிச்சதால, அவன் இப்போ என்னைத் தேடலாம். அந்த ஆவணங்கள்ல அவனோட மோசடி வியாபாரத்தோட முழு விவரமும் இருக்கு.”
என் இதயம் வேகமாகத் துடித்தது.
“ஆர்த்தி, அந்த ஆவணங்கள் எங்க இருக்கு?”அவள் மெதுவாகத் தன் கைப்பையைத் திறந்து, ஒரு USB டிரைவைக் காட்டினாள்.
"இதுதான். ஆனா, இதை யார்கிட்டயும் கொடுக்க முடியாது. அல்வானோட செல்வாக்கு எங்கயும் இருக்கு. காவல்துறை, அரசு—எல்லாத்தையும் விலைக்கு வாங்கியிருக்கான்.”
நான் அவள் கையை இறுக்கினேன்.
"நாம இதை முடிச்சிடுவோம், ஆர்த்தி. அந்த அல்வான் உன்னை நெருங்க நான் விடமாட்டேன்" என்று கூறியபடி மோலிலிருந்தும் வெளியே நடந்தோம்.
அந்த நொடியில், திடீரென ஒரு கருப்பு SUV, மோலின் வெளிப்புறத்தில் நின்றது. கண்ணாடிகள் இருட்டாக இருந்தன, ஆனால், அதிலிருந்து இறங்கிய மூன்று நபர்கள் எங்களை நோக்கி வந்தனர்; அவர்களின் நடையில் ஒரு மிடுக்கு இருந்தது.
"அர்ஜுன், அவங்க அல்வானோட ஆளுங்க!” ஆர்த்தி பதறினாள்.
“வா...ஓடு!” நான் அவளை இழுத்துக் கொண்டு மோலின் உள்ளே ஓடினேன்.
துபாய் மோலின் பரந்த பகுதிகள் எங்களுக்கு அநுகூலமாக இருந்தன. ஆனால், அவர்கள் எங்களை விட வேகமாக இருந்தனர்; நாங்கள் அக்வேரியம் நோக்கி ஓடினோம்.
மீன்கள் நீந்தும் பிரம்மாண்டமான கண்ணாடித் தொட்டி... எமக்கு மறைவிடமாக இருக்குமென்று நினைத்தேன்.
அக்வேரியத்தின் மங்கலான விளக்குகளுக்கு மத்தியில், நாங்கள் ஒரு மூலையில் ஒளிந்தோம். ஆர்த்தி வேகமாக மூச்சு வாங்கினாள்.
“அர்ஜுன், நாம இப்படியே ஓட முடியாது. இந்த USBஐ பாதுகாப்பான ஓரிடத்துல வைக்கணும்."
"நான் சுற்று முற்றும் பார்த்தேன். அக்வேரியத்தின் அருகில் ஒரு சிறிய பாதுகாப்பு அலுவலகம் இருந்தது. ஆனால், அல்வானின் செல்வாக்கு காவலர்களையும் தொட்டிருக்கலாம்.
அதனால் எனக்குள் திடீரென ஒரு யோசனை தோன்றியது.
“நீர்த்தடாகம்!” என்றேன்.
"என்ன?” ஆர்த்தி குழப்பமாக என்னைப் பார்த்தாள்.
"நீர்த்தடாகத்தோட கட்டுப்பாட்டு அறை. அங்க யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. நாம அங்க USBஐ மறைச்சுடலாம்"
நாங்கள் மெதுவாக அக்வேரியத்தை விட்டு வெளியேறி, மோலின் பின்புறப் பாதை வழியாக நீர்த்தடாகத்தின் கட்டுப்பாட்டு அறையை அடைந்தோம்.
அங்கு ஓர் ஆபிரிக்க பாதுகாப்புக் காவலர் தூங்கிக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி, நாங்கள் அறைக்குள் நுழைந்தோம். ஆர்த்தி USBஐ ஒரு கணினி உபகரணத்தின் பின்னால் மறைத்து வைத்தாள்.
“இப்போ என்ன?” அவள் கேட்டாள்.
நான் அவளைப் பார்த்து சிரித்தேன்.
“இப்போ, அல்வானை எதிர்க்கப் போறோம். ஆனா, நமக்கு ஓர் உதவி மட்டும் வேணும்."
நான் எனது நண்பன் ராகவை அழைத்தேன். அவன் துபாயில் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்துபவன்.
அவன் அல்வானின் மோசடிகளை அம்பலப்படுத்த தனக்கு ஆதாரங்கள் தேவை என்றான்.
நான் அவனுக்கு நிலைமையை விளக்கி, USBயின் இருப்பிடத்தை சொன்னேன்.
ஆனால், நாங்கள் அறையை விட்டு வெளியேறுவதற்குள், கதவு திறந்தது. ஷேக் அல்வான் நின்றிருந்தான்.
உயரமான, வெள்ளை கந்தூராவில்; அவன் கண்கள் ஒரு புலியைப் போல மின்னின.
"ஆர்த்தி, நீ ரொம்ப தைரியமா இருக்க,” என்றான் அவன்; ஒரு புன்னகையுடன்.
"ஆனா, இது உனக்கு முடிவு.”
நான் ஆர்த்தியை முன்னால் இழுத்தேன்.
"அல்வான்...அவளத் தொடாத” என்றேன் நான்; அவன் சிரித்தான்.
“நீ ஒரு சாதாரண மனுஷன். என் உலகத்துல நீ ஓர் எறும்பு.” என்றான் அவன்!
ஆனால், அந்த நொடியில், ராகவின் குழு கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. அல்வானின் ஆட்கள் தப்பத் தயாராக இல்லை.
ஒரு கணத்தில், அல்வானும் அவன் கூட்டாளிகளும் கட்டப்பட்டு, காவலாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டனர். மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து, ராகவ் USBஐ எடுத்து, அதிலிருந்த ஆதாரங்களை உலக ஊடகங்களுக்கு அனுப்பினான்.
நீர்த்தடாகத்தின் இசை மீண்டும் ஒலித்தது; ஆர்த்தி என்னை இறுக்க அணைத்தாள்.
“நீ இல்லாம நான் இதை எதிர்த்திருந்திருக்க முடியாது, அர்ஜுன்.”
நான் அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.
“நாம ஒண்ணா இருக்கும்போது, எதையும் எதிர்க்கலாம்.”
புர்ஜ் கலீஃபாவின் நிழலில், எங்கள் காதல் அதன் உயரத்தைத் தொட்டது!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments