Ticker

6/recent/ticker-posts

ஈமானியா மதரஸா விவகாரம்.... ! சமூகத்துக்கு கன்னத்தில் அறைந்த உலமாக்கள்


கடந்த வாரம் திஹாரியில் அமைந்துள்ள ஈமானிய மதரஸாவின் இருபதாம் வருடப்பூர்த்தி விழாவும் நான்காவது பட்டமளிப்பு விழாவும்  வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்த விழாவில் 85 மௌலவிமார்களும், புனித அல்குர்ஆனை மனனம் செய்த பல  ஹாபில்களும் வெளியாகினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

பொதுவாக மதரஸா விழாக்களின் போது ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், சமூக முக்கியஸ்தர்கள், உட்பட முஸ்லிம அரசியல் பிரமுகர்கள் போன்றவர்கள் அழைக்கப்பட்டு விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் பிழை இல்லை.

ஆனால்,வீட்டு விவகாரம் வீட்டுக்குள் முடிய வேண்டும்,சமூக விவகாரம் சமூகத்துக்குள் முடிய வேண்டும் , மஹல்லா விவகாரம் மஹலாவுக்குள் முடிய வேண்டும்,நாட்டு விவகாரம் நாட்டுக்குள் முடிய வேண்டும், இதுவே ஒழுங்கு முறை.

மாறாக  இவ்வாறான மார்க்க,ஆன்மீக விவகாரங்களில்,தங்களுக்கு தேவையான அரசியல்வாதிகளை  திருப்திப் படுத்த முனைவதும்,ஒவ்வொருவரும் ,அவரவர் கட்சிக்காரரை  அழைப்பது,போட்டியாக,நான் என் கட்சிக்காரரை அழைப்பது, என பகை தீர்க்க முற்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

மதரஸாக்களின் பரிசளிப்பின் போதும்,பள்ளிவாசல் விவகாரங்களின் போதும்  அவை நம் சமூக விவகாரம் என்பதால், சமூகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி அழைக்கப்பட்டு, விழாக்கள் கொண்டாடப்படுவது நியாயம். வேறுபட்ட அரசியல் கட்சிகளாக இருந்தாலும், முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில்  அவர்களுக்கும் மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் என்பவற்றின் மீது ஒரு கடமை உள்ளது. இவ்வாறு செய்தல் அது ஒரு அரசியல் கண்ணோட்டமாக நோக்கப்பட மாட்டாது.

ஆனால் இந்த திஹாரி ஈமானிய மதரஸாவின் விவகாரம் ஒரு 100% அரசியலாகவே நோக்கப்பட வேண்டும். 

இதன் நிர்வாகிகள் அரசியல்வாதிகளாக இருக்கலாம்.பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். இது ஒரு மார்க்கம் சம்பந்தமான ஆன்மீக விவகாரம் என்பதால், இங்கு அரசியல்  நுழைந்திருக்கக் கூடாது.

அந்நிய மதத்தைச் சேர்ந்த,அதுவும் பிரபல்யமான அரசியல்வாதிகள் அழைக்கப்பட்டதானது சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய உலமாக்கள் செய்த மிகப் பெரும் தவறாகும்.

ஏதோ ஊரில் ஒரு மதரஸாவில் விழா நடைபெறுகின்றது.ஊருக்கு எந்நேரமும் உதவியாக நிற்கும் ஒரு ஊர் அரசியல்வாதி,ஒரு நகர சபையின்,அல்லது பிரதேச சபையின் ஊர் பிரதிநிதி என்ற வகையில், அவர் அந்நியராக இருந்தாலும் சம்பிரதாயத்திற்கு ஒரு அழைப்பை விடுப்பது,இதுவும் ஒரு மேலதிகமான செயல்பாடாக இருந்தாலும், நமது ஊர் பிரதிநிதி எந்நேரத்திலும் ஊருக்கு உதவி செய்பவர் என்ற வகையில் ஒரு நியாயமாக பார்க்கலாம்.

இதை விடுத்து  தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சியின் அரசியல் தலைவரை  கௌரவிப்பதற்காக, இது போன்ற ஆன்மிக தலங்களை பகடை காய்களாக பயன்படுத்துவது தவிர்த்திருக்க வேண்டும்.

இதை விடுத்து செய்யக்கூடாத காரியம் ஒன்றைச் செய்துவிட்டு,  இஸ்லாம் என்பது என்ன. மதரஸாக்குள் நடப்பது என்ன, எமது நட்பன்புகள் என்பது என்ன என்பதை கற்பிக்கவே நாம் அவர்களை அழைத்தோம் என பல்வேறுபட்ட காரணங்களை காட்டி இவற்றை நியாயப்படுத்த முனைவது,செய்த குற்றத்தை விட  பெரிய குற்றமாகும்.
கடந்த காலங்களில் இவை அனைத்தையும் மேடை கட்டி தோரணமிட்டு இவர்களுக்கு விளங்கப்படுத்தியும், செவிடனாகவும் குருடனாகவும் நடித்தவர்கள் இவர்கள்.

இந்த நாட்டில் நாம் வாழ்வதற்கும், எமது மார்க்க விடயங்களை மேற்கொள்வதற்கும், இன்னொரு அரசியல் தலைவரிடம்,அல்லது அவரைச் சார்ந்தவர்களிடம் அவர்களை திருப்திப்படுத்தி,அவர்களிடம் மண்டியிட்டு, எமது மதரஸாக்கள் இதுதான் நடக்கின்றது என,அவர்களிடம் காட்சிப்படுத்தி மண்டியிட வேண்டிய தேவை இல்லை.அவரவரது மார்க்கத்தில் அவரவருக்கு உரிமை உண்டு. 

இது இவர்கள்  காட்டும் நொண்டிக் காரணமாகும்.

உலகத்தில் ஒரு மனிதன் கவலை அடைய கூடிய ஆக உயரிய சந்தர்ப்பம்,தன்னை பெற்று வளர்த்து,ஆளாக்கிய ஒரு தாயை,ஒரு தந்தையை,அல்லது ஒரு குடும்ப உறுப்பினரை,அல்லது தனக்கு உயிருக்கு உயிராக நின்று உதவி செய்த ஒரு நண்பனை இழப்பதாகும்.

இதைவிட பெரிய கவலை,அவ்வாறான பிரிவுகளை தாங்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில்,அந்த இறந்து போன மனிதனின் உடலை தீயில் போட்டு பொசுக்கிய கொடூரமாகும். 

இது உலகத்தில் ஒரு மனிதனை,அல்லது ஒரு சமூகத்தை பழி வாங்கும் விடயத்தில் மன்னிக்க முடியாத ஆக உச்சகட்டம். 

இறுதிக்கட்டத்தில் தன் தாய் தகப்பன்களின் முகத்தை,தன் உடன் பிறந்தவர்களின் முகத்தை,பார்க்க முடியாமல் எரிக்கப்பட்ட பல நூறு சகோதர சகோதரிகளின் ஜனாஸாக்கள்,பிறந்து ஒரு தாயின் இரத்த வடு ஆறு முன் தீயில் பொசுக்கப்பட்ட அழகான பிஞ்சு மலர்,அதை உட்கொண்டு ஜீரணிக்க அந்தத் தீயும் மறுத்திருக்கும்.
அந்த  நேரத்தில் கோபம் கொண்ட கருமேகம் கண்ணீர் வடித்த வரலாறு...

ஈவிரக்கமற்ற இரும்பு கைகளால் நசுக்கப்பட்ட மத உரிமைகள், மனித குல வர்க்கத்திற்கே எதிரியாக மாரிய அந்த நாட்களின் கண்ணீர் கதை, இயற்கை மரனமும் கொரோனா மரணமாக மாற்றப்பட்டு எரிக்கப்பட்ட ஏக்கங்கள்.

இத்தனையையும்  சுயலாபம் கொண்ட ஈவிரக்டமற்ற இதயங்கள்,தங்களின் சுயநலத்திற்காக மறந்திருக்கலாம்.

ஆனால் மார்க்கத்தை கற்றறிந்த  உலமாக்கள் மறந்திருப்பதின் உண்மைதான் ஏன் எனத் தெரியவில்லை. அவர்களின் உலமா போர்வைக்குள் அரசியல் தாண்டவம் ஆடுகின்றதா ?

பிரதியமைச்சர் முனீர் மூலப்பர் அவர்களை அழைத்ததற்காக மாற்றுக் கட்சிக்காரர்கள் நாமல் ராஜபக்ஷ அவர்களை அழைத்தார்கள்,என காரணம் காட்டுவது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணம் அல்ல. 

அவர் ஒரு முஸ்லிம்,தற்போது அவர் சமூகத்தில் ஒரு முக்கியஸ்தர்,சமூகத்துக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர்,அதற்கு,இதை காரணம் காட்டுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதையாகும்

அவ்வாறு  அவர்களுக்கு,மாற்றுக் கட்சிக்காரர்களை அழைக்க வேண்டி இருந்தால்  அப்பகுதியில் உள்ள அக்கட்சிக்காரர்களின் ஒரு சாதாரண ஒரு உறுப்பினரை அழைத்திருக்க முடியும்.

எவ்வாறாயினும் மொத்தமாகவே இவ்வாரான மார்க்க ஆன்மீக விடயங்களில் அரசியலைப் புகுத்த்தியது ஒரு பெரும் குற்றம்.அதிலும் சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய உலமாக்கள் இதை செய்வதென்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தற்போது இலங்கையின் அரசியலைப் பொருத்தவரையில்,ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில்,இவர்களின் இந்த நடவடிக்கையானது ஆட்சியாளர்களின்,ஆளும் தரப்பினரின் முஸ்லிம்கள் சம்பந்தமாக ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்திற்கு உட்படும் வகையிலே நடந்தது.

மதரஸாவின் நிர்வாகிகளுக்கு,ஒரு கட்சியின் தலைவரை திருப்தி படுத்த வேண்டுமாக இருந்தால் அதை அவர்கள் தங்கள தங்களது சொந்த விடயங்களில் இவற்றை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இதை விடுத்து இதை பேசுபவர்கள் குற்றவாளிகள்.இதை பகிர்வர்கள் குற்றவாளிகள்.அவன் பகிர்ந்தான் இவன் பகிர்ந்தான்.இஸ்மத் ஊதிப் பெருப்பித்தான் என அடுத்தவனுக்கு பேசவும்,ஊதி பேருப்பிக்கவும் சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு,வழங்கியவர்கள் தன் சுட்டும் விரலால் மற்றவனை நீட்டி குற்றம் கூறுமுன் மற்றைய நான்கு விரல்களும் நீ தான் குற்றவாளி என்று உன்னை சுட்டிக் காட்டுவதை உணர்ந்து கொள்ளட்டும்.

அரசியல் செய்ய வேண்டியவர்கள், உலமா எனும் போர்வைக்குள் மறைந்து அரசியல் செய்யாமல், தங்களின் வேஷங்களை கலைந்து நடுவீதியில் அரசியல் செய்வதில் அவர்களுக்கு எந்த தடையுமில்லை. 

ஜனாஸாவை எரித்தவர்களை அல்ல,உயிரோடு எரித்தவர்களையும் ஆதரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. . அது அவரவர் உள்ளங்களை பொறுத்தது.

இவர்களின் அரசியலுக்காக,உலமா,மதரஸா,பள்ளிவாசல்,ஆன்மீகத் தலைமைத்துவம் போன்ற ஆடைகளை அணிந்து கொள்வதை விட்டும் இவர்கள் தவிர்ந்து கொள்ளட்டும்.

ஒளிந்து மறைந்து முகமூடி அணிந்தாலும் ஆட வேண்டியது சமூகத்தின் முன் என்பதை இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.

வேலியே பயிரை மேயுமாக இருந்தால் விளைச்சலின் நிலை என்னவாகும் ?

இங்கு வேலி முக்கியமில்லை.பயிறே முக்கியம். ஆயிரம் வேளையும் அமைத்துக்கொள்ளலாம்.
பயிர்கள் பழுதுபடாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

பேருவளை ஹில்மி

 


Post a Comment

0 Comments