
துணையை இழந்து தனிமையில் தவிப்பவள் துவண்டு போகாமல், தன் நினைவுகளைப் பலமாக்கிக் கொண்டு முகநூலில் வந்துபோகும் 'மைதிலி' என்ற கதாபாத்திரத்தை ஒருதலைப் பட்சமாக காதலித்தான் மோகன்!
உணர்வுபூர்வமான அவளது பதிவுகளை ஒன்று விடாமல் வாசித்துவரும் அவனது காதலின் தீவிரமானது, ஒருமுறையாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தி, அவளின் புரொபைலிலிருந்த தொலைபேசி இலக்கத்துக்கு அவனைத் தொடர்புபட வைத்தது!
தொலைபேசித் நீண்ட நேரமாக ஒலித்து ஓய்ந்ததால் ஏமாற்றமடைந்த அவன், கட்டிலில் சாய்ந்து சுழன்று கொண்டிருந்த மின்விசிரியைப் பார்த்துக் கொண்டிருந்தவேளை... சிணுங்கிய
பேசியைக் கையிலெடுத்தபோது, எதிர் முனையிலிருந்து வந்த எண்ணைக் கண்டதும், நழுவி விழப்போன கைபேசியை இறுக்கிப் பிடித்தபடி, தயக்கத்துடன் 'ஓன்' செய்தான்.
“ஹலோ...”
மென்மையாக, ஆனால் சோர்வுடனான கணீரென்ற பெண்குரல் எதிர் முனையில் இருந்து வந்தது!
“ஹலோ... மைதிலியா?” தழுதழுத்தது மோகனின் குரல்!
ஒரு நிமிட மௌனம்!
“நீங்கள் யார்? எண்ட எண் எப்படி உங்களிடம் வந்தது?” மைதிலியின் கேள்வியில் கொஞ்சம் கடுமை இருந்தது!
மோகன் தொண்டையை செருமிக்கொண்டான்.
“மைதிலிதானே பேசுறது…?”
“ஆமா… மைதிலிதான்! நீங்க யாரு?”
சில விநாடிகள் அவன் பேசவில்லை. மொபைல் திரையில் மட்டும் பார்த்த முகம்... இப்போது குரலாக அவன் காதில் விழுகின்றது.
“நான்… மோகன். உங்க முகநூல் விசிரி. உங்க பதிவுகளுக்கு அவ்வப்போது 'லைக்' பன்னுவேனே,ஞாபகமில்லையா?"
அவள் அமைதியாக இருந்தாள்; அந்த அமைதியில் ஏமாற்றங்களாலான ஒரு தூரமிருந்தது.
“'லைக்' போடும் எல்லாரையும் நினைவு வைத்துக் கொள்ள முடியுமா? சரி... சொல்லுங்க…”
“திடீர்னு அழைத்ததுக்கு மன்னிக்கணும். ஆனா… நீங்க நேற்று போட்ட பதிவு… ரொம்ப கவலையா இருந்தது. அதனால…”
மைதிலி ஜன்னலருகே போய் நின்றாள்; வெளியில் மழை தூறிக்கொண்டிருந்தது.
“என் பதிவுகளை நீங்க இவ்வளவு கவனமா வாசிப்பீங்கன்னு நான் நினைக்கல.”
மோகன் மெதுவாக சிரித்தான்.
“நினைவுகளோட வாழ்றவங்க எழுதுற வார்த்தைகள்ற ஓர் உயிரிருக்கும்!
அந்த வரி... அவளின் உள்ளத்தை லேசாகத் தொட்டிருக்க வேண்டும்!
கணவனை இழந்த பிறகு, உலகம் தன்னை அனுதாபத்தோடு பார்த்தது; சிலர் ஆறுதல் சொன்னார்கள்; இன்னும் சிலர் இரக்கம் காட்டினார்கள். ஆனால் யாரும் அவளின் வலியைப் புரிந்துகொள்ள வில்லை!
இந்த 'மோகன் என்ற விசிரி' அவளுக்கு, வேறுபட்ட ஒரு மனிதனாகத் தோன்றினான்.
“நீங்க திருமணம் ஆனவரா?”
அவள் திடீரெனக் கேட்டதும், மோகன் சற்று திகைத்தான்.
“இல்லை…”
“ஏன்?”
"அதுக்கும் ஒரு கொடுப்பினை வேணுமில்லையா…”
அவனது அந்தப் பதிலில் தெரிந்த வலி, அவளது வலியை ஒத்ததாக இருந்ததை மைதிலி உணர்ந்தாள்.
(தொடரும்)
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments