
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் சிறுமியை கோயிலுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் விடுவித்து மீண்டும் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் ஐந்து வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா எனும் இளைஞர் அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி அங்கிருந்த கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தக் கோயிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே உடனே அந்த சிறுமியின் பாட்டி அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை பார்த்து அவரும் அலறியுள்ளார். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், அந்தப் பகுதி மக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் சிறிது நேரத்திற்குள்ளாக மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறி காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதேசமயத்தில், இந்தச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறையினர் மீண்டும் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கும்போது, "இந்தச் சம்பவம் கடந்த 18ஆம் தேதி நடந்தது. சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரின் பெற்றோர் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறியதால் விடுதலை செய்தோம். தற்போது அந்த விவகாரத்தில் விசாரித்தபோது, அவர் நல்ல மன நலத்துடன், மருந்தகத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments