
உலகில் 9 நாடுகள்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக வல்லரசு நாடுகள் மட்டுமின்றி இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இந்த நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதத்தால் ஒட்டுமொத்த உலகையே பாதிப்புக்கு உள்ளாக்க வாய்ப்புள்ளது.
யாருக்குமே தெரியாத அணு ஆயுதங்கள்
இவை அனைத்தும் வெளியுலகிற்கு தெரிந்த அணு ஆயுதங்கள் ஆகும். ஆனால், இந்த உலகில் யாருக்குமே எங்கு இருக்கிறது என தெரியாத சில அணு ஆயுதங்களும் இன்று வரையில் உள்ளன. மேலும், அதை பற்றி இப்போது பலரும் கவலைப்படுவதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போர் மற்றும் அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பனிப்போரின் போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகள் அணு குண்டுகளால் ஒன்றையொன்று தாக்க தயாராகிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில், பல விமானங்கள் அணு குண்டுகளை சுமந்துகொண்டு பறந்திருக்கின்றன. சிறிய சிக்னல் கிடைத்தாலும் அவை பேரழிவை ஏற்படுத்த தயாராக இருந்தன என்பதை நினைத்தாலே கதி கலங்குகிறது.
30 விபத்துகள் நடந்துள்ளன...
இந்த காலகட்டத்தில், சில விமானங்களில் கோளாறுகள் எழுந்த பிறகு, பல அணு குண்டுகளை இழக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அந்த ஆயுதங்களில் சில பின்னர் மீட்கப்பட்டன. பல ஆயுதங்கள் கடுமையான தேடல்களுக்குப் பிறகு காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
தற்போதைய ஒரு அறிக்கையின்படி, 1950ஆம் ஆண்டு முதல் இதுபோல் சுமார் 30க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அணு ஆயுதங்கள் விமானங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன அல்லது காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களை யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
1958இல் நடந்த சம்பவம்
இதற்குக் காரணம், இதுபோன்ற விபத்துகளின் சேதம் மற்றும் பாதகமான விளைவுகள் உலகம் முழுவதும் பல்வேறு விதமான அச்ச உணர்வுகளை ஏற்படுத்தும். இருப்பினும், சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த வகையான விபத்துக்கள் 'உடைபட்ட அம்புகள்' (Broken Arrows) என்று குறிப்பிடப்படுகின்றன.
1958ஆம் ஆண்டின் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று, ஜார்ஜியாவின் டைபீ தீவு அருகே மார்க் 15 தெர்மோநியூக்ளியர் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆயுதத்தை சுமந்து வந்த விமானத்தின் பாதுகாப்பாக தரையிறங்க சிரமப்பட்டது. எனவே, பாதுகாப்பான தரையிறக்கத்திற்கான விமானத்தின் எடையைக் குறைக்க இந்த குண்டுகள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
குண்டு வீசப்பட்ட பிறகு, தேடல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அது கண்டுபிடிக்கப்படவில்லை. சோனார் வசதியை பயன்படுத்தி நீருக்கடியில் கண்டறியும் சாதனங்கள் கூட பயன்படுத்தப்பட்டன. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது. இறுதியில், அது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
1965இல் நடந்த சம்பவம்
1965ஆம் ஆண்டிலும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு B43 தெர்மோநியூக்ளியர் குண்டு பிலிப்பைன்ஸ் கடலின் ஜப்பான் கடற்கரை பகுதியில் விழுந்தது. அது தவறுதலாக வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கடற்படை அதிகாரியும் இந்த வெடிகுண்டுடன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கைக்காக எக்கச்சக்கமாக பணம் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments