
உலக வல்லரசு என மார்தட்டும் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு அறிக்கை விடுவதற்கே உலக நாடுகள் அஞ்சும் நிலையில், தனியொரு நாடாக நின்று எந்தக் கலக்க-தயக்கமுமில்லாமல் அதற்கெதிராக தாக்குதல் தொடுக்கப்போகின்றோம் என பகிரங்கமாக அறிவித்துவிட்டு, இஸ்ரேலில் நிலைகொண்டுள்ள அமெரிக்க போர்ப் படைக்கெதிராக ஏவுகணைகளை ஏவி விட்டதன் மூலம், ஈரான் முழு உலக நாடுகளையும் பிரமிக்க வைத்தது!
அமெரிக்காவும், இஸ்ரேலும் திடீர் தாக்குதல் மூலமே எதிரிகளின் இலக்கை அழிக்கின்ற நிலையில், ஈரான் எப்போதும் முன்கூட்டி அறிவித்துவிட்டு தாக்குதல் நடாத்தி வருகின்றமை ஈரான் இராணுவத்தின் போரியல் நேர்மை, வெளிப்படைத் தன்மை, இஸ்லாமிய வழிமுறை என்பவற்றை முழு உலகிற்குமே பறைசாற்றியுள்ளது.
அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்த நிலையில் கடந்த ஜூன், 13ம் திகதி ஈரானின் அணுசக்தித் தளங்களை குறிவைத்து இஸ்ரேலின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
பதில் தாக்குதல்கள், இஸ்ரேலை வரலாறு காணாத இழப்புக்களையும், தோல்விகளையும் சந்திக்க வைத்தது.
இந்தப்பன்னிரெண்டு நாட்களில் கடந்த நான்கு அறபு-இஸ்ரேல் யுத்தங்களின்போது கூட தான் சந்தித்திராத பேரிழப்பை இஸ்ரேல் சந்தித்துள்ளது.
வைஸ்மென் அறிவியல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனம், மொஸாட் தலைமையகம் மற்றும் பல இராணுவத் தளங்கள் என்பவற்றை ஈரான் தாக்கி அழித்தமை இஸ்ரேலுக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான், ஈரானிடமிருந்து ஓர் இரவைப் பாதுகாக்க இஸ்ரேல் 285 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய நெஸட்டில் அதன் உறுப்பினர்கள் அண்மைக் காலங்களில் ஆற்றிய உணர்ச்சிகரமான உரைகளின்போது, இந்தப்போரால் தமது ஸியோனிஸ யூதர்கள் எந்தளவுக்கு மானசீகமாகவும், உளவியல் ரீதியிலும் பாதிக்கப்பட்டனர் என்பதைச் சுட்டிக் காட்டினர்.
இந்நாட்களில் யூதர்கள் தினமும் கடல்வழியாக நாட்டை விட்டுத் தப்பியோடும் காட்சிகளை அவர்கள் நெஸட்டில் உணர்ச்சி ததும்ப எடுத்துக் கூறினர்.
அதுட்டுமல்லாது பீர்ஷிபா மருத்துவமனையில் கொல்லப் பட்டவர்களின் தொகை அதிகம் என்பதையும் அவர்கள் அங்கு உறுதி செய்து உரையாற்றினர்.
நாடு முழுவதும் இஸ்ரேலிய குடிமக்கள் சொத்துக்களை வாங்குவதில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பைக் கண்டு சைப்ரஸ் அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சமூக ஊடகங்கள் பதிவிட்டு வருகின்றன.
இஸ்ரேல் தொடக்கத்திலிருந்தே ஒருபோதும் எதிர்பார்க்காத ஒரு உண்மையான பேரழிவை எதிர்கொண்டுள்ளது என்பது புலனாகின்றது.
தெருக்கள் மற்றும் சாலைகள் இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளன,துறைமுகங்கள் கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டு, அவற்றின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எரிவாயு மற்றும் மின்சார நிலையங்கள் சேதமடைந்து சேவைகள் இல்லாமலாகியுள்ளன.
தொலைக்காட்சி, செயற்கைக்கோள் சேனல்கள் மற்றும் ஊடகங்களில் காட்டப்படாத விஷயங்கள் பல கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்துத் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இவற்றை மீண்டும் கட்டியெழுப்ப மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாமென ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தற்போதைய அழிவுக்கு மூன்று டிரில்லியன் ஷெக்கல்கள் செலவாகுமென்றும், இவற்றை மீண்டும் கட்டியெழுப்ப நான்கு வருடங்களாவது ஆகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் ஈரானின் மீதான தாக்குதல் எதையும் சாதிக்கவில்லை; ஈரானிய அணு உலைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலும் போதிய பலனை அளிக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்தபடி ஈரானிய ஆட்சி மாறவுமில்லை; வீழ்ச்சியடையவுமில்லை!
இந்த யுத்தத்தின்போது, இஸ்ரேல்நாளொன்றுக்கு 240000 அமெரிக்க டொலர்கள் செலவழிக்கும் நிலை உருவானது. அமெரிக்கா வருடாந்தம் கொடுக்கும் இராணுவ மானியத்தால் கூட இதனை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு ஊடகத் தணிக்கை காரணமாக இஸ்ரேலின் அழிவுகள் பற்றிய முழு விபரங்கள் உலகப்பார்வைக்கு வராமலே போய் விட்டன. இஸ்ரேலின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத்தின் ஆதாரமான ஹைபா துறைமுக நகரையே ஈரான் கடுமையாகத் தாக்கியழித்தது மட்டுமல்லாது, பல முக்கிய நகரங்களின் மின் கட்டமைப்புக்கள் பலவற்றையும் இல்லாமலாக்கியது; அவற்றை சீர்செய்ய நான்கு வருடங்களுக்குமேல் எடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

மொத்தத்தில் மூலோபாய ரீதியில் இந்த பன்னிரெண்டு நாட்போரில் ஈரானில் ஏற்பட்ட இழப்புக்களைவிடவும் பன்மடங்கு இழப்புக்களை இஸ்ரேல் தரப்பு சந்தித்துள்ளன!
இவ்விழப்புக்களால் நாட்டின் பொருளாதாரம் வேகமாகச் சரிந்து வரும் நிலையில், பெருந்தொகையான இஸ்ரேலியர் நாட்டை விட்டு கடல்வழியாகத் தப்பியோடுவதால், போரை இதற்கு மேல் முன்னெடுக்க முடியாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.
இத்தனை நெருக்கடிகளிலிருந்தும் இஸ்ரேலைக் காப்பாற்றவுள்ள ஒரே வழி 'அவசரப் போர் நிறுத்தம்' என்பதை ட்ரம்ப் நிருவாகம் சரியாகக் கணித்ததால், கடந்த ஜூன் 22ம் திகதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணுசக்தித் தளங்களைக் குறிவைத்து தாக்கிவிட்டு, போரின் திசையை வேறு பக்கம் திருப்பியது.
ஈரானின் அணுசக்தித் தளங்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக அதே நாள் நள்ளிரவு கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் பத்தாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் நிலை கொண்டுள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ராணுவம் பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.
இந்த சூழலில்தான் அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் நாடுகளின் தலைவர்களுடன், கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, போரை சுமுக உடன்பாட்டுக்குக் கொண்டு வரலாயினர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
"இஸ்ரேல்-ஈரானிடையே 12 நாட்கள் நீடித்த போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை இரு நாடுகளும் முழுமையாக அமுல்படுத்த வேண்டும். அமைதி திரும்பியிருப்பதால், மத்திய கிழக்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றது" என்று குறிப்பிட்டதன் மூலம் இவ்வருட சமாதானத்துக்கான தனது நோபல் பரிசுக் கனவினை நோக்கி மெல்ல நகரலானார்.
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமை காரணமாக எதிரி நாடான இஸ்ரேல் போரை நிறுத்தியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்,
“போர் நிறுத்தத்தை மீறி ஈரான் இராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்; தெஹ்ரானிலுள்ள இராணுவ நிலைகள் அழிக்கப்படும்" என்று எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
ஈரான் ராணுவத்தின் ஐஆர்ஜிசி தளபதி முஹம்மது கூறும்போது,
“எங்களது மூன்று அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாரிலுள்ள அமெரிக்க விமானப் படைத் தளம் மீது நாங்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினோமே தவிர, போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. அமெரிக்காவோ, இஸ்ரேலோ மீண்டும் எங்களைத் தாக்கினால், தக்க பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
அதன் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவின்போது,
“போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துவிட்டது. அதை இருதரப்பும் மீறக்கூடாது"என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று கண்டிப்புடன் குறிப்பிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம்,
"அமைதியை நிலைநாட்ட ஈரான் விரும்புகிறது. இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறியிருப்பதானது, இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை கடும் அதிருப்தி அளிக்கிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் அனைத்தும் உடனடியாக தங்களது விமானத் தளங்களுக்கு திரும்ப வேண்டும்; ஈரான் மீது எந்தத் தாக்குதலும் நடத்தக்கூடாது. ஈரான் மக்களில் எவரும் இனிமேல் பாதிக்கப்படக் கூடாது.
ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் முழுமையாக தகர்க்கப்பட்டுவிட்டது. இனி ஈரானால் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதலை கைவிட்டு விமான படைத் தளங்களுக்குத் திரும்பின.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானுக்கு எதிரான போரில் எங்களது லட்சியத்தை அடைந்துவிட்டோம். எங்களுக்கு முழு ஆதரவளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். போர் நிறுத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். எனினும், போர் நிறுத்தம் மீறப்பட்டால் பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போர் நிறுத்தத்திற்கு ஈரான் இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம், இஸ்ரேலை ட்ரம்ப் பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார் என்றுதான் குறிப்பிட வேண்டும். போர் நிறுத்தம் அமுல் செய்யப்பட்டிருப்பதை இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments