Ticker

6/recent/ticker-posts

Ad Code



எந்த ரேடரிலும் சிக்காது.. கண்களுக்கும் புலப்படாது.. சீனாவின் கொசு வடிவ டிரோன்


சீனா, 1 சென்டி மீட்டர் உயரம் கொண்ட கொசு வடிவில் மைக்ரோ டிரோனை வடிவமைத்துள்ளது. இது ரேடாரில் புலப்படாமல், உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

"நான் ஈ" படத்தில் கற்பனையாக வடிவமைக்கப்பட்ட இந்த "ஈ"க்கே சவால் விடும் வகையில், கொசு அளவில், அதே தோற்றத்தில் டிரோன் ஒன்றை வடிவமைத்துள்ளது சீனா. 2 மஞ்சள் நிற இறகுகள், நேர்த்தியான கருப்பு நிற உடல், 3 மெல்லிய கால்கள் என கொசுவைப் போன்று காட்சி அளிக்கும் இது தான், சீனா வடிவமைத்துள்ள மைக்ரோ டிரோன்.

அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த டிரோனின் உயரம் வெறும் 1 சென்டி மீட்டர் தான். பூஜ்ஜியம் புள்ளி 3 கிராம் எடை கொண்ட இந்த டிரோனை செல்ஃபோன் மூலமே கட்டுப்படுத்த முடியும். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உள்ள இந்த டிரோனை கண்காணிப்பு அல்லது உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எந்தவித சத்தமும் எழுப்பாமல் பறக்கக்கூடிய இந்த டிரோன் ரேடாரிலும் புலப்படாது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இந்த டிரோனில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் மைக்ரோபோன்கள் புகைப்படம் எடுப்பதுடன், உரையாடல்களை பதிவு செய்து, அதனை பரிமாற்றம் செய்யும்.

சீனாவின் கொசு டிரோன், கண்டுபிடிப்புகளின் உச்சம் என்று விஞ்ஞானிகள் பாராட்டினாலும், அதில் உள்ள ஆபத்தை நினைத்து உலக நாடுகள் அச்சப்படுகின்றன. மிகச் சிறிய அளவிலான இந்த டிரோன் மூலம் எத்தகைய பெரிய ஆபத்தையும் ஏற்படுத்த முடியும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக, உளவு பார்த்தல், சைபர் குற்றங்கள், உயிரியியல் போர் கூட சாத்தியம் என்று கருதப்படுகிறது. இந்த கொசு வடிவிலான டிரோன் மூலம், நச்சுத்தன்மை வாய்ந்த கிருமியை எளிதில் மற்ற நாடுகளுக்கு அனுப்ப முடியும் என அச்சம் எழுந்துள்ளது.

அண்மைக்காலமாக நடைபெற்ற மற்றும் நடைபெற்றுவரும் இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-ஈரான், ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் டிரோன் தான். இதனை ரேடார் மூலம் கண்காணித்து வானிலேயே இடைமறித்து அழிக்க முடியும். ஆனால், எந்த ரேடாரிலும் சிக்காமல், மனிதர்களின் கண்களுக்கும் எளிதில் புலப்படாத வகையிலான இந்த டிரோன், போருக்கான மிக ஆபத்தான ஆயுதமாக தற்போது மாறியுள்ளது.

ஏற்கனவே நார்வே தயாரித்த உள்ளங்கை அளவிலான டிரோன்களைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, கரப்பான் பூச்சி, வண்டுகள் ஆகியவற்றின் வடிவில் டிரோன்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதற்கு சவால் விடும் வகையில், கொசு வடிவில் டிரோன்களை பறக்க விட்டுள்ளது சீனா.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments