Ticker

6/recent/ticker-posts

Ad Code



"நிசப்தத்தின் ஓசை"


ஷீலா...அவள் பேசும்போது, உலகமே மௌனமாகி விட்டது போன்ற உணர்வு;  அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும்  அவனது காதுகளில் ஊடுறுவி, மனதில் சங்கமித்தன.

"சுரேஷ், எனக்கு உன்னிடம் பேசப் பிடித்திருக்கிறது; நான் பேசினால் என் மனதுக்கு நிறைவாகவும் இருக்கின்றது"  கூறிய அவள் மெலிதாகப் புன்னகைத்தாள்.

அந்தப் புன்னகையில் குழந்தைத்தனம் ஒரு புறமும், காயப்படுத்தும் உணர்வு இன்னொரு புறமும் கலந்திருந்ததை அறியாதவனல்ல அவன்; அதனால், அவன் மெளனமாகி விட்டான்.

இப்படியாக, மௌனம் கலந்த மொழி ஒன்றை பக்கசார்பாக அவர்கள் நாள்தோறும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் சொல்லாத வார்த்தைகளும் அவனுக்கு வசனமாகிவிட்டன. ஆனாலும், அவன் ஒருபோதும் காதல் பற்றி வெளிப்படையாகப் பேசுபவனல்ல!

ஒருநாள், அவள் நேராகவே கேட்டுவிட்டாள்.

"சுரேஷ்... நீ என்னை காதலிக்கிறாயா?"
அவன் கண்கள் மறுபுறம் திரும்பின; முகத்தில் சிரிப்பு இல்லை; அவளது மனதிலோ மழைத் தூறல்!

அவன் மெதுவாகச் சொன்னான்,

"நீ பேசினால் எனக்கு மனநிறைவுதான்... ஆனா காதல் வெறித்தனமானது; அதுதான் பயப்படுகின்றேன்!"

"அப்படியா?" அவள் வியப்புடன் அவனைப் பார்த்தாள்.

"ஆமாம்... உன்னைப் பேச விடாமல் நான் பார்த்துக் கொள்ள வேண்டும்; அதுதான் காதல்!அது இல்லை என்றால் வெறும் நட்புத்தான்!"

அவள் சிரித்தாள்.

"சரிதான்... ஆனால் சில நேரங்களில் நட்பே காதலாக மாறுகிறதே?"அவள் கேட்டான்.

"நட்பில் இருக்கிற அழகு எதற்கும் சமமாகாது. நீ சொல்லிக் கொண்டே இருக்கலாம், நான் கேட்டுக் கொண்டே இருக்கலாம்… எனக்கு அது போதும்!" என்றான் அவன்.

புன்னகையோடு, காதலை கேட்க வந்தவள்… நட்பின் மேன்மையை அவனிடமிருந்து அறிந்து கொண்டவளாக... மெளனித்து அந்த இடத்தை விட்டும் அகன்றாள்!

***

ஷீலாவை அவன் முதன் முதலாகக் கண்டபோது, ஏற்கனவே பழகிப்போன ஒரு முகம் போலவே அவள் அவனுக்குத் தோன்றினாள்.

கொழும்பு கலைக் கல்லூரி அரங்கத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, அவள் பேச்சின் நேர்த்தியும், மொழி நயமும் அவனுக்குள் ஓர் இன்ப இசையைக் கிளறிவிட்டது.

அந்த நாள் முழுக்க சுரேஷ் அவளது பேச்சின் ஒலியைத் தன் நினைவில் வழிய விட்டான்.

"நான் பேசினால் எனக்கே மனநிறைவு" என்ற அவளது வாக்கியத்தை, 'நீ என்னோடு பேசினால் எனக்கும் மன நிறைவுதான்' அவன் தனக்குள் மாற்றிச் சொல்லிக் கொண்டான்!

ஓர் ஊடகச் சந்திப்பு, ஒரு தேனீர் வைபவம், ஒரு புத்தக வெளியீடு... இவையெல்லாம் இரண்டு மனதுகளுக்குமிடையில் சில காலங்கள் பாலங்களாயின. 

ஷீலா பேச்சுத் திறமைமிக்க மென்மையான உள்ளம் கொண்டவள். சுரேஷின் மௌனத்தின்  நுட்பம் அறியாதவள்; அவள் பேசிக்கொண்டே இருப்பாள்; அவன் கேட்டுக்கொண்டிருப்பான்.

"சுரேஷ்... உன்னிடம் பேசினாலே என் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது. சிக்கலாயிருந்த என் எண்ணங்களை, பொறுமையாக நீ கேட்டுக் கொண்டிருப்பது, ஒருவகையில் என் உள்ளத்தை ஒழுங்குபட வைக்கின்றது!"

அவன் வழமைபோல் புன்னகைத்தான்; அவனால் கூட அறிந்துகொள்ள முடியாத பாசம் ஒன்றைத் தனக்குள் வைத்துக் கொண்டு! 

ஆனால்... ஒருநாள் அவளின் குரல் மாறியது;
வார்த்தைகள் சற்றே கசப்புக் கலந்து வெளியே வந்தன.

"சுரேஷ்… நீ என் மீது காதல் கொண்டிருக்கின்றாயோ இல்லையோ என்று எனக்குள் சில நேரங்களில் குழப்பமாக உள்ளது… 
ஆனா அதையே நீ ஒருபோதும் சொல்ல மாட்டேங்கற மாதிரி  ஒரு வெறுமை என்னைப் பாடாய்ப் படுத்துகின்றது!"

அவன் பதில் சொல்லவில்லை; வழமையான புன்னகைதான்! அப்போது அவள் கோபமாகிவிட்டாள்.

"நீ என்னைக் காதலிக்கறாயா இல்லையா? இப்போ நான் கேட்கிறேன். என் முகத்துக்கு நேரா பதில் சொல்லு!"

அவன் தன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான்; மெளனமான ஒரு ஓசை அவனுள் வார்த்தைகளாக வெளிவந்தன!

"நீ பேசும்போது, நான் உலகத்தை மறந்துடறேன். அதுக்குப் பேரு காதலாக  இருக்கலாம்… இல்ல, நட்பின் உச்சமாக இருக்கலாம். ஆனா… உன்னை நான் காதலிக்கிறேன்னு சொன்னா, உன்னோட பேச்சே மாறிவிடும்… அதுக்காகத்தான் பயப்படுகின்றேன்!"

அவள் சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு,
பின் நிதானமாகப் பேசினாள்...

"இப்போ எனக்குப் புரிந்துவிட்டது...நீ பேசாம இருக்கறதாலதான், நான் பேசிகிட்டே இருக்கிறேன்; அதை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!" அவள் உரத்துக் கூறிவிட்டு, அங்கிருந்து நடந்தாள்!

***

நாட்கள் நகர்ந்தன.

ஷீலாவின் வாழ்க்கையில் ஆதி என்ற ஒரு புதிய மனிதர் நுழைந்தார்; அவர் ஒரு சமூக ஆர்வலர்; சர்வதேச அமைப்பொன்றில் பணியாற்றுபவர்.

ஒரு நிகழ்ச்சியின்போது இருவரும் சந்தித்தனர். ஆதி, உயர்ந்த சிந்தனை, திறந்த மனம் கொண்டவர். அவரது பேச்சும், சிந்தனையும் ஷீலாவை ஈர்த்திருக்கலாம்!

அவள் மனதில் ஏற்பட்ட சிறு குழப்பத்தோடு போனை எடுத்தாள்.

“சுரேஷ்… நான் ஆதியோட நேற்று லஞ்சுக்குப் போனேன்… சுவாரசியமான மனிதர் என்னை விட அவரை உனக்குத்தான் பிடிக்கும்” என்றாள் சிரித்தபடி!

அவள் சிரிப்பை அவன் எப்படி அறிவான்; அவர்களென்ன, வீடியோகோலிலா பேசிக் கொண்டிருக்கிறார்கள்?

ஆனால், அந்த அவளது வார்த்தைகள் அவனைக் கீறியது!

அவளது குரலிலிருந்திருந்த கண்ணியமான ஈர்ப்பு, இப்போது வேறொருவருக்காக ஒதுக்கப்படுகிறதா?

தன் உள்ளுணர்ச்சியை வெளிக் காட்டாவிட்டாலும், இரவு முழுக்க அவனால் தூங்க முடியவில்லை!

அடுத்தடுத்த வாரங்களில்... ஷீலா, சுரேஷைச் சந்திக்க வில்லை. அவளது அழைப்புகள் மெல்லக் குறைந்தன.  அவனது 'மெசேஜ்' களுக்கும் தாமதமான பதில்களே வந்தன.

கேட்டால், 'பிஸி' என்பாள்; ஆதியோட ஒரு திட்டப் பணிக்காகப் போகிறேன் என்பாள். சுரேஷின் உள்ளத்தில் ஒரு கேள்வி நிழல்போல் தொடர்ந்தது.

"நம்ம நட்பு உண்மையா? இப்போ இனிமேல் ஒண்ணுமே இல்லாமப் போயிடுமா?"

ஒருநாள்... அவள் திடீரென வந்தாள்; கண்கள் சோகமாக...

"நான் நுவரெலியவில்  ஒரு 'கேம்ப்'புக்கு ஆதியுடன் போனேன்;  நல்ல அனுபவம்.
ஒரு நாள் முழுவதும் நான் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவரும் என்னைப் பார்த்தார்; பேசினார். அந்த பார்வையில் எனக்குத் தெரிய வந்தது… உன்ன மாதிரி அவர் இல்லை என்று. நான் உன்னோட பேசாம வாரக்கணக்கா இருந்தேன்… அதுவே எனக்கு ஒரு சோதனை!"

அவளது கண்கள் பனிப்படலம் போலச் சில்லிற்றது!

"நீ பேசாம இருந்தது ஒரு அழுத்தம்.
ஆதி பேசினாலும் கூட அதில் இசை இல்லை!
நீ பேசாம இருந்தாலும்… அதில் ஓர் இசையை நான் கண்டேன். நான் இதுவரை புரிந்து கொள்ளாத ஒன்றை இப்போது புரிந்து கொண்டேன்!"

சுரேஷ் அசையவில்லை; அவள் வார்த்தைகளை முழுமையாக விழுங்கிக் கொண்டான். அவளே மீண்டும் பேசினாள்.

"நட்பு என்ற பெயரில் நீ என்னைத் தாங்கிக் கொண்டாய். நான் காதலிக்கிறேன்…
நீ காதலிக்கிறாயா?"

இந்த முறையும் அவள் நேராகக் கேட்டாள்.
முந்தையதை விட மென்மையாக; ஆனால், தயக்கத்துடன்.

சுரேஷ் நெடுநேர மௌனத்தில் இருந்தான்.
பின் மெதுவாக சொன்னான்,

"நீ பேசுகிறே... அதைவிட மேலான பதில் வேணாம்னு தோணுது."

நுட்பமான உறவை சோதிக்கும் ஒரு பெரும் சோதனை வந்தால், அந்த உறவு நியாயமா இல்லையா என்பதற்கான சான்றாக அமையும்.

கொழும்பு வெயிலில் கூட ஆங்காங்கே விரியும் நிழல்களைப் போல, சில நேரங்களில் நம்மால் பராமரிக்க முடியாத உணர்வுகள் நீளமடைகின்றன.

***

அப்போதுதான், ஷீலா, ஐக்கிய நாடுகள் கழகத்தின் ஒரு திட்டத்திற்காக ஆப்கானிஸ்தானில் பணியாற்ற அழைக்கப்படுகிறாள்!

ஒரு வருடம்... பாதுகாப்பற்ற சூழ்நிலை.
நேரடி செயல்பாடுகள். வலையத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் கூட தொடர்புகள் கட்டுப்படலாம். ஆனாலும் அவள் அந்த வாய்ப்பை நிராகரிக்கவில்லை!

அவள் தனது இலட்சியத்தில் உறுதியானவள்.
"நீ என்ன நினைக்கற?" அவள் கேட்டாள்.

"நீ போகவேண்டும்… ஏனென்றால்..."
சுரேஷ் எதையோ சொல்ல வந்து நிறுத்தினான்;
அவளிடம் பிடிபடாதிருப்பதற்காக...!

"நான் போயிட்டா நம்ம உறவு என்னவாகும்?"
அவள் கவிழ்ந்த பார்வையில் கேட்டாள்.

"நாம் பேசிக்கொண்டிருக்கும் வரை அது நட்பு.
நாம் பேச முடியாமலே நினைவில் இருந்தால் அது காதல்!"

"நீ என்னை நிலத்தில் வைக்க நினைக்கறே?"

அவள் கண்களில் சினம் கலந்த ஈரப்பதம்; அவளை அவன் போக வேண்டாம் என்று கூற மாட்டானா என்ற ஒரு நப்பாசை!

"நான் உன்னை வானத்தில் பறக்க விட நினைக்கிறேன். நீ திரும்ப வருவாய் என்ற நம்பிக்கையோடு..." என்றான் அவன்.

அத்துடன் அவர்களின் உரையாடல் முற்றுப் பெற்றது!

***

ஆப்கானிஸ்தானில் அந்த இடம் ஷீலாவுக்குப் புதிய உலகம். மழை வராத மண்ணிலும், அவளது எண்ணங்கள் சுரேஷைப் பற்றியே நினைத்தது! இதுதான் காதலா?

ஆனால், அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை; அவளின் சுயகட்டுப்பாடு, சுரேஷை நிழலாக்கியது!

இதே வேளை… சுரேஷின் வீட்டில், திடீரென அவனது தந்தைக்கு மூளையில் காயம்; அவன் பணி, குடும்பம், மருத்துவச் செலவுகள்… அனைத்தும் சுமையாய் விரிந்தன.

ஒரு வருடம்...அவளிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை; அவன் உறவுகளை மறந்தவன்போல் தினமும் தவித்தான்.

ஒருநாள், அவளிடமிருந்து வந்த ஒரு கடிதம்…

"என்னை மன்னித்துவிடு சுரேஷ்...
இந்த ஒரு வருடம் எனது உயிர்  என் நிழலிலேயே சங்கமமாகியிருந்தது. நாம் இருவரும் காதலிக்கிறோமா இல்லையா என்ற கேள்விக்கு பதில் தேவை இல்லை… எனக்குத் தேவை, நீ என் அருகில் இருப்பது; நான் திரும்பி வருகிறேன்… ஆனால், பழைய ஷீலாவாக அல்ல…"

சரியாக ஒரு வருடம் கழித்து, ஷீலா தாயகம் திரும்பினாள்; அவள் முகத்தில் புன்னகை இல்லை. அவளது கண்களில் காணாத கள அனுபவங்கள்;  உடம்பும் சற்று சுருங்கி போயிருந்தது.

ஆனால்… அவள் கண்களில் ஒருவித உறுதி.
"வாங்க சுரேஷ்…  காபி பரிமாறட்டுமா?"
அவள் கேட்டதும் சுரேஷின் உள்ளம் நெகிழ்ந்தது; 
நெருக்கமான மென்மைத்தனம் இல்லாவிட்டாலும், ஒருவிதமான நெருங்கும் பண்பு சற்றுத் தூரத்தில் இருப்பதுபோல்  தோன்றியது.

"நீ எப்படியிருக்க?" அவள் கேட்டாள்.

"நீ இல்லாமல் பழகிட்டேன்…" அவன் கூறினான்!

அவளின் கண்களில் சிறிது கனமான சிரிப்பு!

"நானும் அப்படித்தான். அதனால் தான் நம்ம உறவை இன்னொரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன். நமக்கிடையே பாசம் இருக்கிறது.
அதை காதலாக நினைத்தது தவறு.
நீ என் உலகத்தை அமைதியாக்கிய மனிதன்.
அதுவே போதும் எனக்கு."

'அது எனக்கு போதுமா?' சுரேஷின் உள்ளம் தனக்குள் கேட்டுக் கொண்டது; ஆனால் அவன் வாயால் கேட்கவில்லை.

"நீ பேசாம இருந்ததால், நான் பேசாமலே வாழத் தெரிஞ்சு கொண்டேன்...சுரேஷ், அது எனக்கு நல்லதொரு பாடம். நீ என்னை நெகிழ வைக்கிறதில்லை.அதை நான் தேடிப் பயணிக்கிறேன்."

அவன் கண்களில் நீர் வழிந்தது.
ஆனாலும், அவன் சிரித்தான்.

அவள் சொன்னது உண்மை. தாமரைப்பூக்களைப்போல அவர்கள் உறவு;
நீரில்தான் முளைத்தது, ஆனால் தண்ணீரிலேயே துலக்கப்பட்டுவிட்டது.

ஒரு நேர்த்தியான கதிரவன் மறையும்போது,
மறுநாள் வேறொரு ஒளி வரும்.

அவர்கள் இருவரும் வேறு பாதையில்; ஒரே நினைவோடு பயணிக்கிறார்கள்!

செம்மைத்துளியான்.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments