
ஆசியக் கோப்பை 2025 தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 20 ஓவரில் 127/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
சாய்ம் ஆயுப் 0, முகமத் ஹரிஷ் 3, பகார் ஜமான் 17, கேப்டன் சல்மான் ஆகா 3, ஹசன் நவாஸ் 5, முகமத் நவாஸ் 0 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் யாருமே பெரிய வீரர்கள் எடுக்கவில்லை. அதிகபட்சமாக துவக்க வீரர் ஃபர்கான் 40 (44) ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சாகின் அப்ரிடி 33* (16) ரன்கள் குவித்து பாகிஸ்தானை ஓரளவு காப்பாற்றினார்.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்தார். எதிர்புறம் அதிரடி காட்ட முயற்சித்த சுப்மன் கில் 10 (7) ரன்னில் சாய்ம் ஆயுப் சுழலில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 (13) ரன்கள் விளாசி சாய்ம் ஆயுப் சுழலில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் – திலக் வர்மா ஆகியோர் மிடில் ஓவர்களில் பாகிஸ்தானை சிறப்பாக எதிர்கொண்டனர். நல்ல பந்துகளை மதித்து மோசமான பந்துகளை அடித்து நொறுக்கிய அவர்கள் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. அதில் நிதானத்துடன் விளையாடி வந்த திலக் வர்மா 31 (31) ரன்களில் சாய்ம் ஆயுப் சுழலில் சிக்கினார்.
மறுபுறம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சூரியகுமார் 5 பவுண்டரி சிக்ஸருடன் 47* (37) ரன்கள் குவித்து போட்டியை முடித்தார். இறுதியில் சிவம் துபே 10* (7) ரன்கள் எடுத்த உதவியுடன் 15.5 ஓவரிலேயே 131/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 2 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்றை நெருங்கியுள்ளது.
அத்துடன் பாகிஸ்தான் அணியை மற்றுமொரு போட்டியில் தோற்கடித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் தங்களை நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்தது. மறுபுறம் இந்தியாவை தோற்கடிக்க சல்மான் ஆகா தலைமையிலான இளம் பாகிஸ்தான் அணியில் உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னர் முகமது நவாஸ் உள்ளிட்ட தங்களுடைய 5 ஸ்பின்னர்களே போதும் என்று பயிற்சியாளர் மைக் ஹெசன் சவால் விடுத்திருந்தார். ஆனால் ஆயுப் தவிர்த்து முகமது நவாஸ் உட்பட எஞ்சிய பாகிஸ்தான் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கிய இந்தியா அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments