
அமெரிக்காவில் இந்தியர் ஒருவரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் பகுதியில் சாலையோரம் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமவுலி நாகமல்லையா என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். கர்நாடக மாநிலத்தை பூர்வீமாக கொண்ட இவர், அங்கு தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
இவர் பணியாற்றிய ஹோட்டலில் உள்ள வாஷிங் மெஷின் பழுதாகியுள்ளது. எனவே, அதை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று மேலாளரான சந்திரமவுலி, சக ஊழியர்களிடம் கூறியுள்ளார். அங்கு பணியாற்றிய 37 வயதான கோபஸ் மார்டினெஸ் என்பவர், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்த பெண் மூலமாக வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என மார்டினெஸிடம் கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மார்டினெஸ், கத்தியை எடுத்துக் கொண்டு தாக்க வந்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரமவுலி தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், விடாமல் துரத்திச் சென்ற மார்டினெஸ், சந்திரமவுலியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அந்த நேரம் பார்த்து அங்கு சந்திரமவுலியின் மனைவி மற்றும் மகன் வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் தடுத்த போதும் இருவரையும் தள்ளிவிட்டு சந்திரமவுலியை தொடர்ந்து கண்மூடித் தனமாக குத்தியுள்ளார். தொடர்ந்து ஆத்திரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவரின் கழுத்தை அறுத்த மார்டினெஸ், தலையை துண்டித்து சாலையில் வீசி எட்டி உதைத்துள்ளார். இந்த கொலைபாதக செயலை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபஸ் மார்டினெஸை கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே ஆட்டோ திருட்டு, அடிதடி வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது, கொலை வழக்கில் கைதாகியுள்ள மார்டினெசுக்கு பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சாலையோர ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றிய இந்தியர் ஒருவரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments