
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியது. விரைவில் இந்தியாவில் துவங்கும் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 100+ ரன்கள் (102) வித்தியாசத்தில் தோற்கடித்த முதல் அணியாக உலக சாதனை படைத்த இந்தியா தொடரை சமன் செய்தது.
அந்த நிலையில் வெற்றியாளர் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கடந்தப் போட்டியில் சந்தித்த அவமானத் தோல்விக்கு பதிலடியாக இந்தியாவை அடித்து நொறுக்கியது. அதற்கு தகுந்தார் போல் இந்திய பவுலர்களும் சுமாராக பந்து வீசினார்கள்.
அதைப் பயன்படுத்தி வெறித்தனமாக விளையாடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவரில் 412 ரன்கள் விளாசி ஆல் அவுட்டானது. அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்தது. மறுபுறம் இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக 400+ ரன்கள் கொடுத்து மோசமான சாதனை படைத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜார்ஜியா 81, எலிஸ் பெரி 68, பெத் மூனி சதமடித்து 138, அஸ்லே கார்ட்னர் 39 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் 2, தீப்தி சர்மா 2, அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 413 என்ற மெகா இலக்கை துரத்திய இந்தியாவுக்கு பிரதிகா ராவல் 10, ஹர்லின் தியோல் 11 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா சரவெடியாக விளையாடி 25 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி போராடினார். மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய மந்தனா 50 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமான சதத்தை அடித்த இந்திய வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்தார்.
அப்போது லேசான காயத்தை சந்தித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் 52 ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அமர்க்களமாக விளையாடிய மந்தனாவும் 17 பவுண்டரி 5 சிக்சருடன் 125 (63) ரன்களில் விக்கெட்டை இழந்தார். லோயர் ஆடரில் தீப்தி சர்மா 72 (58) ரன்கள் விளாசி போராடிய போதிலும் ரிச்சா கோஸ் 6, ராதா யாதவ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.
இறுதியில் ஸ்னே ராணா 35 (41) ரன்கள் எடுத்துப் போராடியும் 47 ஓவரில் 369 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக 300+ ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2022 ஹமில்டன் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 298/8 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகப்பட்ச ஸ்கோர். மறுபுறம் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிம் கார்த் 3, மேகன் ஸ்கட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments