Ticker

6/recent/ticker-posts

இனி ஊழல் இருக்காதாம்.. உலகின் முதல் AI அமைச்சர் அறிமுகம்.. இது லிஸ்ட்லயே இல்லையே


டிரானா: செயற்கை தொழில்நுட்பம் (ஏஐ) இல்லாத இடமே கிடையாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் அரசியலிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கால் பதித்திருக்கிறது. அல்பேனியா நாட்டில் முதல் ஏஐ அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த செயற்கை நுண்ணறிவு அமைச்சர் ஊழலை எதிர்த்துப் போராடுவதோடு, பொதுச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த அமைச்சருக்கு அந்நாட்டு அரசு டியெல்லா என பெயரிட்டிருக்கிறது. டியெல்லா என்றால் சூரியன் என்று பொருள். கடந்த ஜனவரியில், e-Albania தளத்தில் ஒரு குரல் உதவியாளராக டியெல்லா அறிமுகப்படுத்தப்பட்டது. 

குடிமக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதற்காக இது உருவாக்கப்பட்டது. இதுவரையில், டியெல்லா 36,000க்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆவணங்களைச் செயல்படுத்தியுள்ளதுடன், சுமார் 1,000 சேவைகளை குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. 

தற்போது அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றுள்ள டியெல்லா, அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான முடிவுகளை நிர்வகிக்கும் உலகின் முதல் AI அமைச்சராக மாறியுள்ளது. 

டியெல்லாவின் கீழ் வரும் ஒவ்வொரு பொது டெண்டரும் "100% ஊழலற்றதாக" இருக்கும் என்றும், நிதி ஒதுக்கீட்டில் முழு வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் பிரதமர் ராமா உறுதியளித்துள்ளார். 

அல்பேனியா நீண்டகாலமாக ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பொது டெண்டர்கள் பெரும்பாலும் ஊழல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் ஈட்டிய லாபத்தை சட்டபூர்வமாக்க சர்வதேச கும்பல்கள் இந்த நாட்டைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஊழல் அரசாங்கத்தின் உயர்மட்ட மட்டங்களை எட்டியுள்ளதாகப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு அமைப்பை நம்புவதன் மூலம், மனித சார்புத்தன்மையை நீக்கவும், அரசு ஒப்பந்தங்களில் முறைகேடுகளின் அபாயத்தைக் குறைக்கவும் முடியும் என அல்பேனிய அரசாங்கம் நம்புகிறது. எதிர் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அல்பேனியா முயன்று வருகிறது. 

அதற்கு முன்னர் தங்கள் நாட்டின் மீது இருக்கும் ஊழல் கரையை போக்க இப்படியான நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர ஊழலை ஒடுக்குவது ஒரு முக்கிய நிபந்தனையாகும். 

இந்த முயற்சி புரட்சிகரமானதாகக் கருதப்பட்டாலும், டியெல்லாவின் முடிவுகளுக்கு மனித மேற்பார்வை இருக்குமா என்பதை அரசாங்கம் இன்னும் குறிப்பிடவில்லை. போதுமான பாதுகாப்பு இல்லையென்றால், மேம்பட்ட AI அமைப்புகளும் முறைகேடுகளுக்கு உள்ளாகக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

oneindia

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments