
இங்கிலாந்து மண்ணில் கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் விராட், ரோஹித் இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்று பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தனர். ஆனால் ஆரம்பம் முதலே இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் சவாலைக் கொடுத்த இளம் இந்தியா 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது.
அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இந்தியா தோற்கும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அன்றைய நாளில் நெருப்பாக விளையாடிய இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது. குறிப்பாக அதற்கு முந்தைய நாளில் சிராஜ் கேட்ச் விட்டதைப் பயன்படுத்திய ஹாரி ப்ரூக் – ஜோ ரூட் சதத்தை அடித்து இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.
இருப்பினும் கடைசி நாளில் மனம் தளராத சிராஜ் நெருப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியைப் பரிசளித்தார். சொல்லப்போனால் அத்தொடரில் இரு அணிகளைச் சேர்ந்த எந்த வேகப்பந்து வீச்சாளர்களாலும் முழுமையாக 5 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு விதிவிலக்காக 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடிய சிராஜ் அதிக (23) விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனைப் படைத்தார்.
இந்நிலையில் ஷேன் வார்னே ஸ்லெட்ஜிங் செய்து அழுத்தத்தை உண்டாக்கி பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவதில் கலைஞர் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். அதே போன்ற அணுகுமுறையை இந்திய வீரர் முகமது சிராஜ் கொண்டிருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி பார்மி ஆர்மி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஸ்லெட்ஜிங் செய்வது பற்றி எனக்கு பெரும்பாலும் தெரியாது. ஆனால் நீங்கள் திரையில் பார்க்கும் பெரும்பாலான விஷயங்கள் அனைத்தும் காட்சிக்காக நடக்கக்கூடியதாகும். சிராஜ் போன்றவர் அது போன்ற சூழ்நிலையை தன்னுடைய அனைத்து வழியிலும் உருவாக்குவார். அது தன்னுடைய அணி வீரர்களிடம் அல்லது ரசிகர்களிடம் இருந்து பெறுவதாக இருக்கலாம்”
“குறிப்பிட்ட அழுத்தம் மற்றும் திரையரங்கம் போன்ற சூழலை உருவாக்க முயற்சிப்பது அவர்களுடைய வெற்றிக்கான விளிம்பை ஏற்படுத்தலாம். அதுவும் விளையாட்டின் ஒரு கலையாகும். அதை இந்த விளையாட்டில் செய்த மிகச்சிறந்த நபர் ஷேன் வார்னே” என்று கூறினார். முன்னதாக முகமது சிராஜ் உண்மையான போராளி, பொய்யான கோபத்தைக் கொண்டவர் என்று தொடரின் போதே ரூட் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments