Ticker

6/recent/ticker-posts

இந்தியாவுக்கு மரண பயம் காட்டிய ஓமன்! டாப் கிளாஸ் பேட்டிங், பவுலிங்! கடைசி வரை போராடி தோல்வி!


Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஓமன் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கடைசி வரை இந்தியாவுக்கு மரண பயம் காட்டிய ஓமன் அணி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் அசத்தியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஓமனை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்ததது. அரை சதம் அடித்த சஞ்சு சாம்சன் 45 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன் எடுத்தார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார். அக்சர் படேல் 13 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்களும், திலக் வர்மா 29 ரன்களும் எடுத்தனர். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யவில்லை.

பவுலிங்கில் கலக்கிய ஓமன் அணி

ஓமன் அணியின் ஷா பைசல், ஜிதேன் ராமானந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஓமன் அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் சூப்பராக இருந்ததால் இந்திய அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை. பின்பு 189 என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி பேட்டிங்கிலும் கலக்கியது. கேப்டன் ஜதீந்தர் சிங், ஆமிர் கலீம் பொறுப்புடன் விளையாடினார்கள். நன்றாக பேட்டிங் செய்த ஜதீந்தர் சிங் 33 பந்தில் 5 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 8.3 ஓவர்களில் 56 ரன்னாக இருந்தது.

ஆமிர் கலீம் அசத்தல் பேட்டிங்

மறுபுறம் ஆமிர் கலீம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்தார். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அடித்த அவர் அபிஷேக் சர்மா, ஷிவம் துபே பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அவர் 38 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹம்மாத் மிர்ஸும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். குல்தீப் யாதவ்வின் ஓவரில் தொடர்ந்து இரண்டு இமாலய சிக்சர்களை விளாசி பிரம்மிக்க வைத்தார்.

அதிரடி அரை சதம்

தொடர்ந்து இருவரும் இந்திய பவுலர்களை விளாசித் தள்ளி பவுண்டரியும், சிக்சருமாக நொறுக்கினார்கள். கடைசி 15 பந்தில் ஓமன் அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்திய பவுலர்கள் பீதி அடைந்தனர். அற்புதமாக விளையாடிய ஆமிர் கலீம் 46 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யாவின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார்.

கடைசி வரை ஓமன் போராடி தோல்வி

மறுமுனையில் அதிரடியில் வெளுத்துக் கட்டிய ஹம்மாத் மிர்ஸா 30 பந்தில் அரை சதம் அடித்து கலக்கினார். தொடர்ந்து அவர் 33 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆனார். இதன் பிறகு விநாயக் சுக்லா 1 ரன்னில் வெளியேறினார். கடைசியில் ஜிதேன் ராமானந்தி சில பவுண்டரி விளாசி போராடினார். ஓமன் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவை விட சிறப்பாக ஆடிய ஓமன்

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் இந்தியாவை விட ஓமன் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக விளையாடியது. இந்தியா போன்ற உலகின் மிகச்சிறந்த அணிக்கு ஓமன் இந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்ததே அந்த அணிக்கு பெருமைமிக்க விஷயமாகும். இந்த போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றி சில பரிசோதனைகளை செய்த இந்திய அணி இன்றைய போட்டியை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளும்.

asianetnews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments