Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் - மெகா உணவு பூங்காக்கள் திறப்பு! : விவரம் உள்ளே!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொழில் பூங்காக்களில் அமைத்துள்ள

16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், 120 கோடி ரூபாய் செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் 157.91 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திண்டிவனம் மெகா உணவு பூங்கா மற்றும் 70 கோடி ரூபாய் செலவில் தேனி மாவட்டத்தில் 123.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேனி மெகா உணவு பூங்கா ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

சிப்காட் தொழில் பூங்காக்களில் பணிபுரிவோரின் குழந்தைகள் பராமரிப்புக்காக 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்

முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி தொழிலாளர் நலன் பேணுவதிலும் தமிழ்நாடு அரசு தனிக் கவனம் செலுத்திவருகிறது. இந்தியாவிலேயே அதிகமான செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண்களில் 43 சதவிகித பங்களிப்பை கொண்டிருப்பது தமிழ்நாட்டின் தனிச் சிறப்பும் பெருமையும் ஆகும். எனவே, பெண் தொழிலாளர்களின் நலன் பேணும் விதமாக, மகளிர் தங்கும் விடுதிகள், பொது வசதிகள், திறன் மேம்பாட்டு வசதிகள், தாய்மார்கள் நலன் காக்கும் பொருட்டு அர்பணிப்புடன் கூடிய குழந்தை காப்பக வசதிகளையும் சிப்காட் நிறுவனம் அமைத்து வருகின்றது.

அந்த வகையில், தேர்வாய்கண்டிகை, வல்லம் வடகால், சிறுசேரி, கும்மிடிப்பூண்டி, கடலூர், பர்கூர், பெருந்துரை, தூத்துக்குடி, நிலக்கோட்டை, இராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, ஒரகடம், பிள்ளைப்பாக்கம், ஓசூர், கங்கைகொண்டான் ஆகிய 16 தொழில் பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டன.

இந்த குழந்தைகள் காப்பகங்களை, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தொழில் துறை மகளிர் அமைப்பு (FICCI-FLO) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

தொழில் பூங்காக்களில் பணிபுரியும் பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்களின் குழந்தை பராமரிப்பு சுமையை குறைக்க ஏதுவாக பணிபுரியும் இடத்திற்கு அருகில், பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலமைப்புடன் இக்காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெகா உணவுப் பூங்காக்கள்

தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம், மாநிலத்தில் உணவுசார் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய மூன்று மாபெரும் உணவுப் பூங்காக்களை உருவாக்கியுள்ளது. 138 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மணப்பாறை மெகா உணவுப் பூங்கா 29.12.2022 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திண்டிவனம் மெகா உணவு பூங்கா

அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கொள்ளார் மற்றும் பெலாகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 157.91 ஏக்கர் பரப்பளவில் 120 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள திண்டிவனம் மெகா உணவு பூங்காவினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இப்பூங்காவில், 3 தொழிற்சாலைகளுக்கு 36.05 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, 123.84 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 350 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அத்துடன் தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க 55.59 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்திட தயார் நிலையில் உள்ளது.

தேனி மெகா உணவு பூங்கா

தேனி மாவட்டத்தில் உப்பார்பட்டி, தப்புகுண்டு மற்றும் பூமலைகுண்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 123.49 ஏக்கர் பரப்பளவில் 70 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள தேனி மெகா உணவு பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இப்பூங்காவில், 11 தொழிற்சாலைகளுக்கு 45.97 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, 160.53 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 700 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அத்துடன் தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்க 27.34 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்திட தயார் நிலையில் உள்ளது.

kalaignarseithigal

 


Post a Comment

0 Comments