Ticker

6/recent/ticker-posts

தெருவில் காபியை ஊற்றியதால் பெண்ணுக்கு ரூ.17,500 அபராதம்! எங்கு தெரியுமா?


இந்தியாவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காபி, டீ அல்லது குளிர்பானங்களின் கடைசி சில சொட்டுகளை, தெருவோரங்களில் உள்ள இடங்களில் ஊற்றுவது நம்மில் பலருக்கும் ஒரு சாதாரண பழக்கமாக இருக்கலாம். ஆனால், லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த சிறிய செயல் ரூ.17,500 அபராதம் வரை கொண்டு சென்ற வினோதமான சம்பவம் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. மேற்கு லண்டனை சேர்ந்த Burcu Yesilyurt என்ற பெண், சமீபத்தில் பேருந்துக்காக Richmond ரயில் நிலையம் அருகே காத்திருந்தார். அப்போது, தனது கையில் இருந்த கப்பில் மீதமிருந்த காபியை, பேருந்தில் சிந்திவிட கூடாது என்பதற்காக அருகிலிருந்த தண்ணீர் போகும் இடத்தில் ஊற்றியுள்ளார்.

அடுத்த சில நொடிகளில், Richmond upon Thames கவுன்சிலை சேர்ந்த மூன்று அமலாக்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1990ன் (Environmental Protection Act 1990) கீழ், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் கழிவுகளை அகற்றியதாக கூறி, அவருக்கு 150 பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,500 அபராதம் விதித்துள்ளனர்.

அதிர்ச்சியும், விவாதமும்

இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த Burcu Yesilyurt, "நான் சட்டத்தை மீறுகிறேன் என்பது எனக்கு தெரியாது. அந்த இடத்தில் எதுவும் ஊற்றக்கூடாது என எந்தவிதமான எச்சரிக்கை பலகைகளும் அங்கு இல்லை. இந்த சம்பவம் என்னை மிகவும் பயமுறுத்திவிட்டது" என்று BBCக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இது ஒரு பெரிய விவாத பொருளானது. பலரும், தங்களுக்கு கூட இப்படி ஒரு சட்டம் இருப்பது தெரியாது என்று கருத்து தெரிவித்தனர்.

அபராதம் ரத்து மற்றும் மன்னிப்பு

பொதுமக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, Richmond கவுன்சில் நிர்வாகம் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்தது. ஆரம்பத்தில், தங்கள் அதிகாரிகளின் நடவடிக்கை சரியானது என்று வாதிட்டாலும், பின்னர் அதிகாரிகளின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, Burcu Yesilyurt-க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக முடிவு செய்தது. அக்டோபர் 22ம் தேதி, Burcu-வுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், "உங்கள் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்காக எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கவுன்சில் நிர்வாகம் மன்னிப்பு கோரியது.

தொழில்நுட்ப ரீதியாக அதிகாரிகள் அபராதம் விதித்தது சரி என்றாலும், மேல்முறையீட்டில் இது ரத்து செய்யப்பட்டிருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்ததாக கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பொது இடங்களில் திரவ கழிவுகளை அகற்றுவது குறித்த வழிகாட்டுதல்களை மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கும் முறைகளை மறுஆய்வு செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த சம்பவம், பலரும் அறியாத சுற்றுச்சூழல் சட்டங்கள் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியதோடு, அத்தகைய விதிகள் குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

zeenews

 


Post a Comment

0 Comments