Ticker

6/recent/ticker-posts

காற்று மாசுவால் ஒரே ஆண்டில் 7.9 மில்லியன் பேர் மரணம்... வயதானவர்கள், பெண்களுக்கே அதிக பாதிப்பு!


காற்று மாசு என்பது மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்னை ஏற்படுத்தும், இதய நலனை பாதிக்கும் என்று ஆண்டாண்டு காலமாக சொல்லி வருகிறோம். அவற்றையெல்லாம் தாண்டி, அது ஒரு உயிர்க்கொல்லியாகவும் உருமாறி இருக்கிறது என்பதே சமீபத்திய அதிர்ச்சி தகவல். State of Global Air 2025-ன் ஆய்வுப்படி, கடந்த 2023-ம் ஆண்டில் உலகளவில் ‘காற்று மாசுவால் ஏற்பட்ட டிமென்சியா (ஞாபக மறதி)’ தொடர்பான பாதிப்புகளால் 6,26,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

காற்று மாசு, மனிதர்களின் 11.6 மில்லியன் ஆரோக்கியமான ஆண்டுகளை பறிப்பதாகவும், டிமென்சியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் இறப்புகளில் 29 சதவிகிதம் காற்று மாசுவால் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஞாபக மறதிக்கும் காற்று மாசுவிற்கும் என்ன தொடர்பு? ஆய்வு சொல்வதென்ன? பார்க்கலாம்…

ஆய்வு சொல்வதென்ன?

2023-ல் காற்று மாசுவால் ஏற்பட்ட இறப்புகளில் 86 சதவிகித இறப்புகள், தொற்றா நோய்களான இதய பாதிப்புகள், தீவிர மற்றும் நீண்டகால நுரையீரல் பாதிப்புகள், நீரிழிவு நோய், டிமென்சியா போன்றவற்றால்தான் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 7.9 மில்லியன் இறப்புகள், காற்று மாசு ஏற்படுத்திய தாக்கத்தினால் ஏற்பட்டுள்ளன. இதிலும் அதிகம் பாதிக்கப்படுவது தென் ஆசியாவும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் என சொல்லப்படுகிறது. அதிலும் ஆண்களைவிட பெண்களுக்கே டிமென்சியாவிற்கான வாய்ப்பு அதிகரித்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்கள்…

காற்று மாசுவின்போது உருவாகும் நுண்மாசுகள், நுரையீரலில் நுழைவதன் மூலம் ரத்த ஓட்டத்தில் கலந்து மூளையை சென்றடைகிறது. அங்கு அழற்சி, மன அழுத்தம், மூளை திசுக்களில் பாதிப்பு, நரம்பு பிரச்னைகள் போன்றவற்றை தூண்டுகின்றன. இவையாவும் அல்சைமர், டிமென்சியா, லேசான அறிவாற்றல் சார்ந்த குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இவற்றின் விளைவாக ஞாபக மறதி, சுயமாக செயல்படுதல், பகுத்தறிந்து செயல்படுதல் போன்றவை ஏற்படுகின்றன. குறிப்பாக அதிக காற்று மாசில் இருப்பவர்களுக்கு மூளை வளர்ச்சியில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவையாவும் பதற்றம், மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். 

இந்த ஆய்வு முடிவுகளை குறிப்பிட்டு, வருங்காலத்தில் வயதானவர்களுக்கான ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் இன்னும் உயரக்கூடும் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். ஏனெனில் டிமென்சியா என்பது பெரும்பாலும் வயதானவர்களுக்கு, வயது முதிர்வால் ஏற்படும் ஒருவகை ஞாபக சக்தி குறைபாடுதான்.

அதிகரிக்கும் காற்று மாசு…

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் தீபாவளி பண்டிக்கைக்கு பின்னா், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. இன்னொரு பக்கம், சென்னையிலும் தீபாவளி இரவில் காற்றின் தரம் மோசமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காற்று மாசுவின் அளவு உயரும் நிலையில், இன்னொருபக்கம் இதுபோன்ற அதிர்ச்சிதரும் புள்ளிவிவரங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

news18

 


Post a Comment

0 Comments