
அமைச்சர் துரைமுருகன், “கட்சியை நடத்தும் தலைவருக்கு இரண்டு கண்கள் அல்ல; உடல் முழுக்க கண்களாகவும், சிந்திக்கும் திறனும் இருக்க வேண்டும்” என விஜய் குறித்தும், “ஆர்.என். ரவியை நாங்கள் ஆளுநராக மதிப்பதும் இல்லை; அவரைப் பற்றி பேசுவதும் இல்லை” என ஆளுநர் குறித்தும் பேசியுள்ளார்.
திமுக மூத்த தலைவரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “41 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் அவர் மீது குற்றச்சாட்டை வைக்கின்றனர். இதற்கு அவர் தான் பதில் கொடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அவர் பதிலும் கொடுக்கவில்லை, வெளியேயும் வராமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். இது எந்த அளவிற்கு அவருக்கு பலன் கொடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை.
தாமதமானால், துக்கத்தை அவர்கள் மறந்துவிடுவார்கள். இதை எல்லாம் எண்ணிப்பார்க்கும் அரசியல் சாதுர்யம் அவருக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல. பல்வேறு குணங்களும், தொழில்களும் கொண்ட பல்வேறு மக்களை கொண்டது தான் கட்சி. எனவே ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு இரண்டு கண்கள் அல்ல; உடல் முழுக்க கண்களாகவும், சிந்திக்கும் திறனும் இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய திறன் எந்தக் கட்சிக்கு இருக்கிறதோ, அந்தக் கட்சி தான் செழிப்பாக இருக்கும், வெற்றி பெறும். அப்படி இல்லை என்றால் அந்தக் கட்சி குறுகிய காலத்தில் மறைந்துவிடும்” என்று தெரிவித்தார்.
மற்றொரு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகனிடம், “தமிழ்நாட்டில் இன்னும் வறுமை ஒழியவில்லை. தீண்டாமையும், பிரிவினைவாதம் அதிகரித்து இருக்கிறது என ஆளுநர் கூறியிருக்கிறார்” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அவர் இந்த மாநிலத்தின் ஆளுநர் அல்ல; எங்களின் எதிர்க்கட்சித் தலைவர். ஆளுநருக்குரிய கண்ணியத்தையும் அந்தஸ்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரை போல் தரம் தாழ்ந்து பேசுகிறார். எனவே அவரை ஆளுநராக நாங்கள் மதிப்பதும் இல்லை; அவரைப் பற்றி பேசுவதும் இல்லை.
வடநாட்டில் தான் பல்வேறு இடங்களில் பிரிவினைவாதம் தலைத்தூக்கியுள்ளது. எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டை தென்றல் தவிழும் பூமியாக மாற்றிவைத்திருக்கிறோம். ஆளுநர் கூறுவதை போல் ஏராளமானோர் சொல்லியிருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எனவே ஆளுநர் சொன்ன கருத்தை நான் புறக்கணிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments