Ticker

6/recent/ticker-posts

தோத்தாலும் பரவால்ல.. விராட், ரோஹித்துக்காக ஆஸி ரசிகர்கள் இந்தியாவை விரும்புவாங்க.. ஹைடன் பேட்டி


ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்குகிறது. பெர்த் நகரில் துவங்கும் அத்தொடரில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. அவருடைய தலைமையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளது.

சொல்லப்போனால் 36, 37 வயதைத் தாண்டியுள்ள அவர்கள் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க இருநாட்டு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து 2027 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் நோக்கத்துடன் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாடத் தயாராகியுள்ளனர்.

இந்நிலையில் இம்முறை விராட், ரோஹித் சர்மாவுக்காக ஆஸ்திரேலியா தோற்றாலும் பரவாயில்லை இந்தியா வெற்றி பெற வேண்டுமென்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் விரும்புவார்கள் என ஜாம்பவான் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஹைடன் கூறியுள்ளார். குறிப்பாக விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் தங்களுடைய நாட்டைச் சேர்ந்த வீரரைப் போல் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே கடைசி முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடும் அவர்கள் வெற்றிகரமாக விடை பெற வேண்டும் என்பதே ஆஸ்திரேலிய ரசிகர்களின் விருப்பம் என்றும் ஹைடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியர்கள் எப்போதும் மிகவும் சிறந்த விளையாட்டு வீரர்களைப் பார்க்க விரும்புவார்கள் என்று விஷயத்தை நான் சொல்வேன்”

“அவர்கள் விராட் கோலியை தங்களுடைய சொந்த வீரரைப் போல் கொண்டாடக் கூடியவர்கள். அது ரோஹித் சர்மாவுக்கும் பொருந்தும். பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானம் அருமையானது. அங்கே ரசிகர்களின் கூட்டம் அற்புதமாக இருக்கும். அங்கே மில்லியன் கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள் என்பதால் இந்திய அணிக்கு அமோக ஆதரவு இருக்கும். அவர்கள் விராட் மற்றும் ரோஹித் சர்மாவை கொண்டாடுவார்கள்”

“சொல்லப்போனால் நிறைய ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவர்களுக்காக இந்தியா வெற்றி பெறுவதைப் பார்க்க விரும்புவார்கள். ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களுடைய சிறந்த ஆட்டத்தைப் பார்க்க அனைவரும் உற்சாகத்துடன் உள்ளார்கள். எனவே விராட், ரோஹித் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். விராட் கோலி 13000 ஒருநாள் ரன்கள் அடித்துள்ளார். ரோஹித் சர்மாவின் சராசரி 50க்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே அவர்களுடைய ஆட்டத்தைப் பார்ப்பது நல்ல வாய்ப்பு” என்று கூறினார்.

crictamil

 


Post a Comment

0 Comments