Ticker

6/recent/ticker-posts

இனி 2 மணி நேரத்தில் ஆந்திராவிற்கு பறக்கலாம்.! தமிழ்நாட்டிற்கு வரப்போகுது புல்லட் ரயில்..!


ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயண நேரத்தைக் குறைக்கவும் இந்தியாவில் வந்தே பாரத் விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்த கட்டமாக புல்லட் ரயில் சேவையை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டது. இதன்படி நாட்டில் மும்பை முதல் அகமதாபாத் வரை முதல் புல்லட் ரயில் சேவை விரைவில் இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில் புல்லட் ரயில் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் புல்லட் ரயில் சேவையை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் முதல்படியாக சென்னை முதல் ஹைதராபாத் வரை புல்லட் ரயில் சேவையை இயக்குவதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது தெற்கு மத்திய ரயில்வே.

இதற்கு ஒப்புதல் கொடுத்தவுடன் அடுத்த கட்டப் பணிகள் தொடங்கப்படும். இதனையடுத்து பெங்களூரு முதல் ஹைதராபாத் வரையிலும் புல்லட் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

தற்போது சென்னையில் இருந்து ஹைதராபாத் வரையிலான 778 கி.மீ. தொலைவைக் கடக்க விரைவு ரயில்கள் 12 மணி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. இநத ரயில் தடத்தில் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால், பயண நேரம் வெறும் 2.20 மணி நேரமாக குறைந்து விடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கும் மேலான பயண நேரத்தை புல்லட் ரயில் குறைக்கும் என்பதால், பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இதற்கு அதிக செலவுகள் ஆவதைக் காட்டிலும், ஒரு ரயில் நிலையத்தை அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பது தான் பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் ரயில் நிலையத்தின் பக்கத்தில் வணிக வளாகங்கள், போக்குவரத்து மையங்கள் உள்பட மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என்பதால், 50 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பது தமிழக அரசிற்கு சவாலானதாக இருக்கும்.

சென்னை மாவட்டத்தில் சென்னை மற்றும் மீஞ்சூர் ரிங் ரோடு ஆகிய 2 இடங்களில் ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன. சென்னையில் இருந்து கூடுர் வழியாக ஹைதராபாத்திற்கு புல்லட் ரயில் சேவை இயக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், திருப்பதி வழியாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கேற்பவே தற்போது திட்ட அறிக்கையைத் தயாரித்துள்ளது தெற்கு ரயில்வே.

தமிழ்நாட்டில் மட்டும் 61 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் சேவை அமையவுள்ளது. இதில் 11.6 கி.மீ. தொலைவிற்கு சுரங்கப்பாதையை அமைக்க வேண்டும் என்பதால், கட்டுமானப் பணிக்கு முன்னதாக புவியியல் ஆய்வுகள் நடைபெற உள்ளன.

சென்னையில் போந்தவாக்கம், தச்சூர், விச்சூர், மாத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வழியாக புல்லட் ரயில் பாதை செல்லவுள்ளது. இப்பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அதிகாரிகள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இந்த புல்லட் ரயில் 65 தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

kalkionline

 


Post a Comment

0 Comments