Ticker

6/recent/ticker-posts

68 ரன்ஸ்.. விராட், ரோஹித்தை முந்திய பாபர் அசாம் 2 உலக சாதனை.. தெ.ஆ அணியை வீழ்த்திய பாகிஸ்தான்


பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. அதனால் சமநிலைப் பெற்ற தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி லாகூரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 139/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 34, கோர்பின் போஸ்க் 30, கேப்டன் பெரிரா 29 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 0, பார்ஹான் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். 3வது இடத்தில் களமிறங்கிய பாபர அசாம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சல்மான் ஆகா 33 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

மறுபுறம் தொடர்ந்து அசத்திய பாபர் அசாம் நீண்ட நாட்கள் கழித்து அரை சதமடித்து 9 பவுண்டரியுடன் 68 (47) ரன்கள் குவித்து அவுட்டானார். இதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 40 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற இந்தியாவின் விராட் கோலியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பாபர் அசாம் 124 இன்னிங்சில் 40 முறை 50+ ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 117 இன்னிங்சில் 39 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ரோஹித் சர்மாவின் (4231) சாதனையை கடந்த போட்டியிலேயே உடைத்த பாபர் அசாம் (4302) புதிய சாதனை படைத்தார்.

அதனால் விராட், ரோஹித்தை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுகின்றனர். ஆனால் ஐசிசி டி20 உலகக் கோப்பைகளில் பாபர் ஒருமுறை கூட ஆட்டநாயகன் விருது வென்றதில்லை என்பது வேறு கதை. இறுதியில் உஸ்மான் கான் 6*, அஸ்ரப் 4* ரன்கள் எடுத்ததால் 19 ஓவரிலேயே 140/6 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு லிசாத் வில்லியம்ஸ், கோர்பின் போஸ்க் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

crictamil

 


Post a Comment

0 Comments