
ரஷ்யாவின் ஸ்பெர்பேங்க் நடத்திய கண்காட்சியில், 'கிரீன்' என்ற செயற்கை நுண்ணறிவு ரோபோ ஜனாதிபதி புடின் முன் நடனமாடி அவரை வியக்க வைத்தது. புடின் ரோபோவைப் பாராட்டிய நிலையில், அவரது மெய்க்காப்பாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் (Sberbank), தனது தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி ஒன்றை நடத்தியது. இந்தக் கண்காட்சியில், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மனித உருவ ரோபோ ஒன்று ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு முன்னால் நடனமாடி, அவரை வியக்க வைத்தது.
ரஷ்ய அரசின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வில், புடினுக்கு எதிரே நின்ற ரோபோ, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர், தனக்குப் பிடித்த பாடலுக்கு நடனமாடியது.
"என் பெயர் கிரீன் (Green). நான் செயற்கை நுண்ணறிவு கொண்ட முதல் ரஷ்ய மனித உருவ ரோபோ" என்று அந்த ரோபோ புடினிடம் கூறியது.
புடினின் பாதுகாப்பும் பாராட்டும்
இந்த நிகழ்ச்சியை புடினின் மெய்க்காப்பாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்தனர். ரோபோ நடனமாடி முடித்த பிறகு, அது புடினிடம் நெருங்கிவிடாமல் இருக்க, ஒரு மெய்க்காப்பாளர் இருவருக்கும் இடையில் வந்து நின்றார்.
ரோபோவின் இந்த நடனத்தைக் கண்ட புடின், அதன் செயல்பாட்டு மிகவும் அழகாக இருப்பதாகப் பாராட்டினார். ரோபோவுக்கு நன்றி தெரிவித்த அவர், தொடர்ந்து கண்காட்சியைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்.
இந்த ரோபோவின் மென்பொருள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும், அதனால் பல உடல் உழைப்பு சார்ந்த பணிகளைச் செய்ய முடியும் என்றும் ஸ்பெர்பேங்க் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கியின் பல்வேறு வணிகப் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
கீழே விழுந்த மற்றொரு ரோபோ
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு மாஸ்கோவில், 'ஐடோல்' (Aidol) என்ற மற்றொரு ரஷ்ய AI ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. அது மேடையில் தோன்றிய சிறிது நேரத்திலேயே தலைகுப்புற விழுந்தது. அதைத் தொடர்ந்து 'கிரீன்' ரோபோவின் வெற்றிகரமான செயல்பாடு ரஷ்யாவின் ரோபோடிக்ஸ் துறைக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
ஸ்மார்ட் ஏ.டி.எம்
இந்தக் கண்காட்சியின் போது, ஸ்பெர்பேங்கின் புதிய ஸ்மார்ட் பண இயந்திரத்தையும் (Smart Cash Machine) புடின் ஆய்வு செய்தார். இந்த இயந்திரம், அதிலுள்ள கேமராவின் உதவியுடன், வாடிக்கையாளரின் நாடித்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற 10 அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களின் ஆரோக்கியம் பற்றிக் கூறுகிறது.
சமீபத்தில் தனக்குப் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், எல்லாம் சரியாக இருப்பதாகவும் புடின் அப்போது தெரிவித்தார்.
asianetnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments