Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை பறவைக் காய்ச்சல்... அடுத்தடுத்து வெளியான தகவல்கள்!


அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் புதிய வகை பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் கண்டறியப்பட்ட பறவைக்காய்ச்சலில் இருந்து இது வேறுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம், முதியவர் ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்குப்பின் தற்போதுதான் மனிதர் ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டவருக்கு நவம்பர் 14-ம் தேதி பாதிப்பு ஏற்பட்டதாகவும், மறுதினம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் வாஷிங்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024 மற்றும் 2025-ல் அமெரிக்காவில் 70 பேரை பாதித்த H5N1 வகை பறவைக்காய்ச்சலுக்கு உள்ள சில பண்புகள், தற்போது ஏற்பட்டுள்ள H5N5 பறவைக்காய்ச்சலுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது.

இவற்றில் H5N1 பறவைக் காய்ச்சலானது, பால் மற்றும் கோழிப்பண்ணைகளில் பணிபுரிவோருக்கே அதிகம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதும் பாதிப்பு உறுதியான நபரின் வீட்டின் பின்புறம் கோழிப் பண்ணை உள்ளது. மேலும் அங்கு அதிகம் காட்டுப் பறவைகள் வந்துள்ளன. இதில் காட்டுப் பறவைகளே, H5N5-க்கு காரணமாக இருக்குமென தற்போதைக்கு கணிக்கப்படுகிறது. H5N5 தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆய்வு முடிவுக்கு பின்னரே விரிவான தகவல்கள் தெரியவரும் என அமெரிக்க ஆய்வாளர்கள் அந்நாட்டு ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் H5N5 வைரஸ் பறவைக்காய்ச்சலும், H5N1 போலவே செயல்படுவதாகவும், அதேபோல்தான் இதன் பாதிப்பும் இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம், இந்த வகை பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

news18

 


Post a Comment

0 Comments