Ticker

6/recent/ticker-posts

ஒளவையாரின் நல்வழி பாடல்!-18


பாடல் - 35.

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.

விளக்கம்: 

பூக்காமலேயே காய்க்கக் கூடிய  வகை மரங்கள் இருக்கின்றன. மக்களில் நாம் சொல்லாமலேயே குறிப்பு அறிந்து செயல் படுபவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவு தான் தூவி விதைத்தாலும், முளைக்காமல் போகும் விதைகளும் உண்டு. அது போல் எத்தனை அறிவுரைகள் வழங்கினாலும், அதைப் புரிந்து நடக்காத மூடர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள். 

பாடல் - 36.

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

விளக்கம்:

நண்டு, முத்துச் சிப்பி, மூங்கில், வாழை போன்றவை அவற்றின் இறுதிக் காலம்  வரும் போது, அவற்றின் வாரிசுகளை வெளிப் படுத்தும். அது போல் ஒரு மனிதனுக்கு அழிவு காலம் வரப் போவதை, அவன் தனது மனைவி தவிர மற்ற மகளிர் மீது ஆசைப் படுவதை வைத்து அறிந்து கொள்ளலாம். 

(தொடரும்)


 


Post a Comment

0 Comments