Ticker

6/recent/ticker-posts

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்? மஞ்சள் கரு சாப்பிடுவது ஆபத்தா ஆரோக்கியமா?


முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்...

நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை குறைந்த செலவில் பெற மிகச்சிறந்த தேர்வு முட்டைதான். இருப்பினும் முட்டைகளைப் பற்றிய பல தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் உள்ளன. அதன் காரணமாக பலர் முட்டையை தங்கள் உணவில் சேர்ப்பதில்லை. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை, மஞ்சள் கரு சாப்பிடுவது நல்லதா கெட்டதா, ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

முதல் விஷயம், முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ரிபோஃப்ளேவின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. வைட்டமின் பி-12 ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கரு மூளை ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. மட்டுமன்றி முட்டையின் மஞ்சள் கருவை மிதமாக சாப்பிடுவது, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், கொழுப்பு அமிலங்கள் என பல சத்துக்கள் உள்ளன. இது பார்வை, எலும்பு வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, கொழுப்பைக் கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது. எனவே ஆரோக்கியமனவர்கள் மஞ்சள் கருவை அச்சமின்றி சாப்பிடலாம். மருத்துவக் கட்டுப்பாடுகள் அல்லது உடல் ரீதியான பிரச்சனைகள் இல்லாவிட்டால், கொலஸ்ட்ரால் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் முட்டையை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிலர் முட்டைகள் உண்பதற்கும் இதய நோய்க்கும், இதய நோயால் ஏற்படும் மரணங்களுக்கும் சம்பந்தம் உள்ளதாக அச்சப்படுவதுண்டு. ஆனால் அப்படி இல்லை என்று ஐம்பது நாடுகளில் நடத்தப்பட்ட முக்கியமான மருத்துவ ஆய்வொன்று தெரிவித்துள்ளது. American Journal of Clinical Nutrition-வில் வெளியான அந்த ஆய்வு சுமார் 1,77,000 பேரிடம் நடத்தப்பட்டது. ஐம்பது நாடுகளில் ஆறு கண்டங்களில் நடந்த அந்த ஆய்வின் முடிவில் முட்டை உண்பதற்கும் ரத்த நாளம் உட்பட இதய நோயால் ஏற்படும் மரணங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதேபோல இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால்: முட்டையில் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அது பெரும்பாலான ஆரோக்கியமான மனிதர்களின் இரத்த கொலஸ்ட்ரால் அளவை நேரடியாக அதிகரிப்பதில்லை என்று Harvard Health Publishing ஆய்வு குறிப்பிடுகிறது. மாறாக, முட்டையுடன் நாம் சேர்த்து உண்ணும் வெண்ணெய், பேக்கன் (Bacon) போன்ற சாச்சுரேட்டட் ஃபேட் (Saturated Fat) நிறைந்த உணவுகளே இதய நோய்க்கு முக்கியக் காரணமாகின்றன.

எனவே முட்டை சாப்பிடுவோர், வேகவைத்த முட்டையாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது. ஆம்லெட்டாக உட்கொள்வோர், எண்ணெய் குறைவாக பயன்படுத்தி சாப்பிட்டு வரலாம். முட்டை போண்டா, கலக்கி, ஹாஃப் பாயில், பச்சை முட்டை போன்ற வடிவங்களில் முட்டை உட்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் இவை நன்மைகளைவிட தீமைகளையே அதிகம் கொடுக்கும்.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்? இதய நோய் இல்லை மற்றும் லிபிட் ப்ரொஃபைல் சீராக இருக்கிறது என்றால், ஒரு நாளைக்கு இரண்டு / மூன்று முட்டை (மஞ்சள் கரு சேர்த்தே) சாப்பிடலாம். இதய நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு முட்டையை சாப்பிடலாம். குறிப்பாக லிபிட் ப்ரொஃபைல் நன்றாக இருப்பவர்கள், முட்டையை மஞ்சள் கருவுடன் அனைவரும் அச்சமின்றி சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

news18


 


Post a Comment

0 Comments