Ticker

6/recent/ticker-posts

3 ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டுப் போர்.. அதிகார மோதலால் பறிபோகும் லட்சக்கணக்கான பிஞ்சு உயிர்கள்! | Sudan Civil War


சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலேயே உள்நாட்டுப் போர் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று ஏற்பட்டது. வளங்களை கட்டுப்படுத்துவதற்காக நடக்கும் இந்தப் போரானது 3 ஆண்டுகள் நிறைவடைந்தும் நீடித்து வருகிறது.

சூடானின் இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 59,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமன்றி போர் நடக்கும் இடத்தில் இருந்து தப்பித்து உயிரை காத்துக்கொள்ள, உள்நாட்டுக்குள்ளேயே சுமார் 90 லட்சம் பேர் இடம்பெயர்ந்து உள்ளதாகவும், அகதிகளாக அண்டைநாடுகளுக்கு 45 லட்சம் பேர் இடம்பெயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டளவில் நடக்கும் இந்தப் போரால் அங்குள்ள பல கோடி மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளான உணவு, உடை, இருப்பிடம், உடல்நலன் போன்றவற்றுக்கான பாதுகாப்பையே பெறாமல் தவித்து வருகின்றனர்.

இந்த வார நிலவரப்படி, சூடானில் கிட்டத்தட்ட 2.89 கோடி மக்கள் கடும் உணவுப்பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். போரில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால், உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டு வருகின்றன. இதுவே உணவுப் பஞ்சத்திற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. சூடானுக்கு உதவுவதற்கு சர்வதேச உதவி நிறுவனங்களுக்கும் நிதி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள சமூக சமையல் கூடங்களும் மூடப்படும் நிலையில் உள்ளன.

நிலவிவரும் இந்தப் பஞ்சத்தால் 2026 இறுதிக்குள் 4 மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த 3 வருடங்களில் சூடானில் 2.1 கோடி பேர் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை சூடான் மக்கள்தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

2026ஆம் ஆண்டின் முதல் 90 நாட்களில் (ஜனவரி-மார்ச்) சூடானில் மட்டும் குறைந்தது 245 குழந்தைகள் கொல்லப்பட்டனர் அல்லது உடல் உறுப்புகளை இழந்துள்ளன என்று UNICEF அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 50% அதிகரித்துள்ளது. இந்த உயிரிழப்புகளில் 80% ட்ரோன் (Drone) தாக்குதல்களால் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் குழந்தைகள் தங்கியிருந்த குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இலக்கு வைக்கப்பட்டதே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 5,22,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமன்றி சுமார் 40 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அளவுக்கான தீவிரமான உள்நாட்டுப் போர் கொள்கைக்காகவோ அல்லது மதத்திற்காகவோ நடப்பது அல்ல. மாறாக நாட்டின் தலைமைப் பொறுப்பை யார் வகிப்பது என்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடக்கிறது. சூடான் நாட்டின் ராணுவத் தலைவர் (SAF) ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை ராணுவப் படையான RSF-ன் தலைவர் முகமது ஹம்தான் டகாலோ ஆகியோர் இணைந்து 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால், நாட்டை யார் ஆள்வது என்பதில் இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டது. அதில்தான் போர் நடந்துவருகிறது. இருவருக்கு இடையேயான இந்த அதிகார மோதலில், உண்மையில் பாதிக்கப்படுவது சூடானும் சூடான் மக்களும்தான்.

news18


 


Post a Comment

0 Comments