
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 100 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வெற்றி தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கே, “கேரளத்தில் உண்மையான நலவாழ்வும், மெய்யான பொருளாதார அதிகாரமளித்தலும் இப்போது தொடங்குகின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில், காங்கிரஸ் கட்சி மீதும் UDF மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த கேரளத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த, அயராத உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய ஒவ்வொரு தலைவர், தொண்டர் மற்றும் நமது UDF கூட்டணிக் கட்சியினருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். கேரளத்தின் இழந்த பெருமையை மீட்டெடுப்பதிலும், UDF-இன் மக்கள் மையப்படுத்திய நல்லாட்சி மாதிரியை முன்னெடுப்பதிலும் நாங்கள் உறுதியுடன் நிலைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அக்கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “கேரளத்திலுள்ள எனது சகோதர சகோதரிகளே, உண்மையிலேயே ஒரு தீர்க்கமான மக்கள் தீர்ப்பை வழங்கியமைக்கு உங்களுக்கு எனது நன்றி. கடுமையாகப் போராடி, மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக, UDF-இன் ஒவ்வொரு தலைவருக்கும் மற்றும் தொண்டருக்கும் எனது வாழ்த்துகள்.
நான் முன்பே குறிப்பிட்டது போல, கேரளத்திடம் திறமை உள்ளது; கேரளத்திடம் ஆற்றல் உள்ளது; இப்போது, இவ்விரண்டையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட ஒரு UDF அரசும் கேரளத்திடம் அமைந்துள்ளது. எனது கேரளக் குடும்பத்தினரை விரைவில் சந்திப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments