
இலங்கையில் இனவாதத்தை முறியடித்து, அனைவரும் சம உரிமையுடன் வாழக்கூடிய நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்குவது தான் அரசாங்கத்தின் முக்கிய அரசியல் நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் இறுதி நாள் நிகழ்வில் வழங்கப்பட்ட விருதை ஏற்றுக்கொண்ட பின் உரையாற்றிய அவர், நாட்டில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது நீண்டகால முயற்சியாக இருந்தாலும் அதில் அரசு உறுதியாக செயல்படும் எனக் குறிப்பிட்டார்.
கடந்தகால இன மோதல்களின் காரணமாக சமூகங்களில் பரஸ்பர அவநம்பிக்கை நிலவி வருவதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த மனநிலையை மாற்றுவது அவசியம் என வலியுறுத்தினார். அனைத்து குடிமக்களும் ஏற்றத் தாழ்வின்றி சம உரிமையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நோக்கத்தை அடைவதற்கான முயற்சியில் அரசாங்கம் எந்த நிலையிலும் பின்வாங்காது என்றும், இன நல்லிணக்கத்தை உறுதியாக நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அதேவேளை, தமிழ் மக்களின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த கருத்தை நினைவுகூர்ந்த அவர், “இந்த நாட்டில் மற்ற குடிமக்களை விட தாழ்ந்தவர் அல்ல என்ற உணர்வுடன் வாழும் நிலை உருவானால்தான் உண்மையான தேசிய ஒற்றுமை உருவாகும்” என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.
மேலும், பிரதேச மக்களுக்கு தங்களது நிர்வாக விவகாரங்களைத் தாங்களே மேற்கொள்ளும் வகையில் பொருத்தமான அமைப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments