Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-133


குமரனின் கிராமத்து மக்கள் விலகிச் சென்றதும், வெட்கம் கலந்த அமைதியுடன் நின்றிருந்த நந்திகாவைப் பார்த்து, குமரன் கொஞ்சம் கேலியாகவும், கொஞ்சம் கரிசனத்துடனும் கூறினான்.

"இங்கே அரண்மனை இல்லை... காவலர்களும் இல்லை... நீதான் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், அம்மா!" என்று சிரித்தான்.
அவளும் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டு,"அனைத்திற்கும் தாங்கள் இருக்கும்போது நந்திகாவுக்கு ஏது கலக்கம்?" என்றாள்.

உடனே குமரன்,
"ஆமாம், ஆமாம்! தாங்கள் நாளும் அறிந்த மாகா கவியல்லவா? தைரியமும் பேசும் வல்லமையும் நிறைந்து இருக்கும். நான் உங்களை குறைத்து மதிப்பிடலாமா, கவிஞரே?" என்று கேட்டான்.

நந்திகா நிமிர்ந்து குமரனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்.

அப்போது அவளது கண்கள் மழை மேகங்களைப் போல கலங்கியதாகத் தோன்றின.

பதறிப் போன குமரன்,"என்னாச்சு, நந்திகா?" என்று கேட்டான்.

"ஒன்றுமில்லை..." என்று தொடங்கியவள் சிறிது தயக்கத்துடன்,

"நீங்கள் என்னை ரொம்ப கேலி செய்வதாகத் தோன்றுகிறது..." என்றுவிட்டு மீண்டும் தலைகுனிந்தாள்.

"அய்யய்யோ! தவறாகப் புரிந்து கொண்டீர்களே, நந்திகா. நான் விளையாட்டாகத்தான் சொன்னேன். நீங்கள் கலங்காதீர்கள்," என்றான் குமரன்.
நந்திகா திரும்பிப் பார்த்தாள்.

"யாரோ ஒரு அன்னியப் பெண்ணிடம் பேசுவது போல நிறைய மரியாதை கொடுக்கிறீர்களே! அது நம்மை இன்னும் தூரமாக்கிவிடாதா?" என்று மென்மையாகக் கேட்டாள்.

குமரன் புன்னகைத்தான்.

"அதெல்லாம் இல்லை. நாள் போகப் போக நெருக்கம் கூடிவிடும். கவலைப்படாதே, நந்திகா," என்றான்.

அவள் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

"இதைத்தான் எதிர்பார்த்தேன்," என்றாள்.

"இந்த 'நீங்கள்', 'வாங்க', 'போங்கள்' என்ற மரியாதை வார்த்தைகள் எல்லாம் நான் உங்களைப் பார்த்து பேசும் வார்த்தைகளாக இருக்கட்டும். ஆனால் சின்ன நாட்டாமை ஐயாவே, நீங்கள் என்னை அப்படி அழைக்காமல் வேறு மாதிரி அழைக்க வேண்டும்."

உடனே குமரன் சிரித்தான்.

"ஆஹா! அது எப்படி, சின்ன நாட்டாமை அம்மையாரே? நீங்களே கூறுங்கள். கேட்போம்."

என்று கூறிக்கொண்டே அவளது கரங்களைப் பற்றினான்.

அந்தத் தொடுதலில் நந்திகாவின் கரங்கள் லேசாக நடுங்கின.

வார்த்தைகளும் தடுமாறின.

"அது... அது வந்து..."

சிறிது வெட்கத்துடன் அவள் தொடர்ந்தாள்.

"என் பெயரை மட்டும் சொல்லி அழைத்தாலே போதும். 'எடு', 'கொடு' என்று ஒருமையில் பேசுங்கள். நான்... உங்கள் துணைவி அல்லவா?"

அவளது குரலில் உரிமையும், அன்பும் கலந்திருந்தது.

குமரனின் முகம் மலர்ந்தது.

"சரி. இன்றிலிருந்து நம் இருவரும் தனியாக இருக்கும் நேரங்களில் மரியாதை என்ற வார்த்தைக்கு உள்நுழையத் தடை உத்தரவு போடுகிறேன்!" என்று சிரித்தான்.
அந்தச் சிரிப்பில் நந்திகாவும் கலந்து கொண்டாள்.

அந்த நேரத்தில்,

"குமரா...! நந்திகா...!" என்று குமரனின் தாய் அழைக்கும் குரல் காதில் விழுந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர்.

பிறகு எழுந்து வீட்டை நோக்கி நடந்தார்கள்.

அங்கே அவர்களுக்காக மற்றொரு மகிழ்ச்சியான பேச்சு காத்திருந்தது.

இருவரது திருமண நாளைக் குறிக்கும் ஆலோசனை தொடங்கியது.

பல யோசனைகளுக்குப் பிறகு, வரும் வார இறுதியில் திருமணத்தை நடத்தலாம் என்று அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தனர்.

அந்தச் செய்தி கேட்டதும் நந்திகாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

குமரனின் இதயமோ மகிழ்ச்சியில் நிரம்பியது.

இரு உள்ளங்களும் ஒன்றாகும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தன.

அவர்கள் வாழ்வு இனிதே அமைய நாமும் மனமார வாழ்த்துவோம்.

அவ்வாறு கூறி பாட்டி தனது கதையை நிறைவு செய்தாள்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments