Ticker

6/recent/ticker-posts

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு


இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு (SLTPB) சொந்தமான அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பாசான் அமரசிங்க புதன்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி குறித்த விசாரணை புதன்கிழமை (17)நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, தனது கட்சிக்காரர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி, சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாமல், ஊவா மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்திற்காக 12,000 ரி-சேர்ட் (T-shirts) கொள்வனவு செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட புலனாய்வாளர்கள், சந்தேகநபர்கள் மீது பொதுச் சொத்துக்கள் மீதான துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர்.

புதன்கிழமை (17) விசாரணையின் போது, பி-அறிக்கையில் (B-report) பெயரிடப்பட்டுள்ள நிதிப் பணிப்பாளரை இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்போகிறீர்களா என்று சி.ஐ.டி. அதிகாரிகளிடம் நீதவான் வினவினார். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தனர்.

திறந்த நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த நீதவான் அமரசிங்க, இந்த நிதிப் பரிமாற்றத்துடன் தொடர்புடைய முதலாவது மற்றும் மூன்றாவது கொடுப்பனவு உறுதிச்சீட்டுகளில் மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளரும், நிதிப் பணிப்பாளரும் கையொப்பமிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஆவணங்களில் கையொப்பமிட்ட நிதிப் பணிப்பாளர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், மூன்றாவது சந்தேகநபருக்குப் பிணை வழங்குவது நியாயமானது என்று நீதவான் குறிப்பிட்டார்.

இதற்கமைய, மூன்றாவது சந்தேகநபரான முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பரை, தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதித்தார். மேலும், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர குணரத்ன, கடந்த ஜூன் 10 ஆம் திகதி தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒக்டோபர் 14, 2026 அன்று மீண்டும் நடைபெறவுள்ளது.

tamilmirror


 


Post a Comment

0 Comments