Ticker

6/recent/ticker-posts

குழந்தை பெற்றால் பணம்.. ஒரு குழந்தைக்கு ரூ.55 லட்சம்.. அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு..!


குழந்தை போனஸ்

ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்ததிலிருந்து 17 வயது வரை சுமார் ரூ.53 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை நேரடி நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

அது வேறு எங்கும் இல்லை சிங்கப்பூரில் தான். சுமார் 70,000 சிங்கப்பூர் டாலர் வரை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்ட, உலக வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை நம்பியிருக்கும் நாடாகும். இத்தகைய பொருளாதாரத்திற்கு திறமையான தொழிலாளர்கள் தொடர்ந்து தேவை. பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே சென்றால் எதிர்காலத்தில் இளம் தொழிலாளர் எண்ணிக்கை குறையலாம். சிங்கப்பூரின் கருத்தரிப்பு விகிதம் (Fertility Rate) வரலாறு காணாத வகையில் 0.87 ஆக குறைந்ததன் காரணமாக அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திக் குறிப்புகள் கூறுகிறது. சிங்கப்பூரின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate )(TFR) 2025-ல் வெறும் 0.87 குழந்தைகள்/பெண் ஆகக் குறைந்துள்ளது. 2024-ல் இது 0.97. அதாவது, சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைக்கும் குறைவாகவே உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மக்கள்தொகையை வரும் காலங்களில் நிலையாக வைத்திருக்க பொதுவாகக் குறிப்பிடப்படும் மாற்று நிலை (replacement level) 2.1. ஆனால் சிங்கப்பூரின் 0.87 என்பது அதைவிட மிகக் குறைவு. இதனால்தான் சிங்கப்பூர் 2026-ல் (Baby Bonus + Large Families ) குழந்தைக்கான ஊக்கத்தொகை + பெரிய குடும்பங்கள் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த குழந்தை பிறப்பினால் சிங்கப்பூர் சந்திக்கும் பிரச்சினை என்ன?

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் அடுத்த 20–30 ஆண்டுகளில் வேலை செய்யும் வயதினரின் எண்ணிக்கை குறையும். முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி, வரி வருவாய், முதியோர் பராமரிப்பு மற்றும் குடும்பப் பொறுப்பு ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படும் போன்ற எதிர்கால பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிங்கப்பூர் அரசு, தற்போதைய போக்கு தொடர்ந்தால் குடிமக்கள் எண்ணிக்கை 2040களின் தொடக்கத்தில் குறையத் தொடங்கலாம் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதிப்புகளை சீர் செய்யவே சிங்கப்பூர் அரசு தொலைநோக்கு பார்வையுடன் குழந்தைகள் போனஸ், பெற்றோர் விடுப்பு, வீட்டு வசதி மற்றும் குழந்தை வளர்ப்பு ஆதரவு போன்ற பல சலுகைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் பணம் மட்டும் கொடுத்தால் பிறப்பு விகிதம் உடனடியாக உயராது என்பதையும் புரிந்து வீடு , குழந்தை வளர்ப்பு , தகுந்த வேலை நேரம் , பெற்றோர் விடுப்பு ,குழந்தை வளர்ப்புச் செலவு ,திருமண வயது ஆகிய அனைத்து பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் அணுக வேண்டிய விஷயமாக சிங்கப்பூர் எண்ணுகிறது.

2026 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்ற National Day Rally உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அதிகபட்சம் S$62,000 வரை ஆதரவு வழங்கும் புதிய SG Child Support Package திட்டத்தை அறிவித்தார். இதன்படி ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகன் குழந்தைக்கும், பிறப்பு வரிசையைப் பொருட்படுத்தாமல், ஒரே அளவிலான ஆதரவு வழங்கப்படும்.

நிதி வழங்கப்படும் விதம் :

S$10,000 — 'பேபி கிஃப்ட்' (Baby Gift) எனும் பணப்பரிசு; குழந்தையின் முதல் ஆண்டில் இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
S$32,000 — 1 வயது முதல் 16 வயது வரை ஆண்டுதோறும் S$2,000 வீதம் வழங்கப்படும்.
S$5,000 — குழந்தையின் CDA (குழந்தை மேம்பாட்டுக் கணக்கு) கணக்கில் வரவு வைக்கப்படும்.
S$5,000 வரை — பெற்றோர்கள் CDA கணக்கில் சேமிக்கும் தொகைக்கு இணையான தொகையை (டாலருக்கு டாலர் அடிப்படையில்) அரசு வழங்கும்.
S$10,000 — குழந்தைக்கு 17 வயது பூர்த்தியாகும்போது, ​​அவர்களின் கல்விக்கான கணக்கில் வரவு வைக்கப்படும்.
S$5,000 — பிறப்பின்போது வழங்கப்படும் 'மெடிசேவ்' (MediSave) மானியம்.
S$2,500 — பள்ளிப் பருவத்தில் வழங்கப்படும் கல்வி நிதிக்கான 'எடுசேவ்' (Edusave) பங்களிப்புகள் என குறிப்புகளிலிருந்து அறிகிறோம்.

குழந்தை பெற்ற பிறகு வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதையும் சிங்கப்பூர் அரசு கருத்தில் கொண்டுள்ளது. 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் உள்ள வேலை செய்யும் பெற்றோருக்கு Childcare Leave அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகளை கவனிப்பதற்காக பெற்றோர் விடுப்பு எடுக்கும் காலத்திற்கான செலவை அரசு அதிகமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் அரசு ஆதரவு பெறும் childcare மற்றும் infant-care மையங்களில் கட்டணத்தை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சமீபத்திய SRS தரவுகளில் TFR இன்னும் குறைவாக, சுமார் 1.4 எனவும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாடு நீண்டகாலமாக குறைந்த பிறப்பு விகிதத்தை சந்தித்து வருகிறது. அதனால் சமீபத்தில் தமிழ்நாட்டில் மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக (365 நாட்களாக) உயர்த்தப்பட்டு உள்ளது.

'மூன்றாவது குழந்தை பெற்றால் விடுப்பு அதிகம் என்ற திட்டம் எல்லா குடும்பங்களுக்கும் ஏற்றதல்ல. முதல் குழந்தைக்குப் பின் இரண்டாவது குழந்தையை தள்ளிப்போடும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் திட்டம் இருந்தால் அதிக பயன் இருக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர். சிங்கப்பூரின் குழந்தைக்கான நிதியுதவி இங்கும் அரசு தந்தால் நாங்களும் குழந்தை பெற தயார் என்று சொல்லும் பெண்களும் உள்ளனர்.

news18


 


Post a Comment

0 Comments